--- --:--:-- --

ரேஷன் அட்டைகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் – உத்தரவு

6

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகளை 1.82 லட்சத்துக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் பயன்படுத்தி வருவது மத்திய அரசின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தகுதியற்ற அந்த அட்டைகளை உடனடியாகத் திரும்ப ஒப்படைக்குமாறு ரயில்வே வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

 

 

2013-ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டப் பயனாளிகளுக்கு மாதம் 35 கிலோ உணவு தானியமும், முன்னுரிமை குடும்பங்களுக்கு (PHH) உறுப்பினர் ஒருவருக்கு தலா 5 கிலோ உணவு தானியமும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி இல்லாதவர்கள்.

 

 

எனவே, விதிகளை மீறி சலுகைகள் பெறுவதைத் தவிர்க்கும் வகையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களது அட்டைகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த அட்டைகள் மூலம் இதுவரை ரேஷன் பொருட்கள் எதுவும் வாங்கவில்லை எனில், அதுகுறித்த உறுதிமொழிப் படிவத்தை (Declaration) ஊழியர்களிடம் இருந்து பெற்றுப் பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரயில்வே தொழிற்சங்கத்தினர், “பல ஊழியர்கள் இருப்பிடச் சான்று போன்ற அடிப்படை அடையாளத் தேவைகளுக்காகவே இந்த ரேஷன் அட்டைகளை பெற்றிருக்கலாம். அவர்களுக்குப் பொருட்கள் வழங்கப்படாத ‘மானியம் இல்லா குடும்ப அட்டைகளை’ முறையாக வழங்கிய பிறகே, தற்போதைய அட்டைகளைத் திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

 

 

முன்னதாக, நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 90 லட்சத்துக்கும் அதிகமான தகுதியற்ற ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்தது. போலி அட்டைகள், ஆதார் விவர முரண்பாடு மற்றும் மரணம் உள்ளிட்ட காரணங்களால் இந்த அட்டைகள் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon