--- --:--:-- --

பொது நூலகங்களில் 70,674 போலி புத்தகங்கள் அகற்றம்; தமிழ்நாடு அரசு

8

தமிழ்நாடு பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களிலிருந்து போலி புத்தகங்களை அகற்றும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் இருந்து செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி நூல்கள் உள்ளிட்ட மொத்தம் 70,674 போலி நூல்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

 

அண்மையில் கோவையில் திறக்கப்பட்ட ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பிரம்மாண்ட நூலகத்தைத் தமிழக முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த தி.மு.க ஆட்சியில் இந்நூலகம் கட்டப்பட்டதற்காக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குப் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. இவ்வாறு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பெரியார் அறிவுலகத்தின் சிறப்புகளுக்கு உரிமை கோரி வந்த நிலையில், எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரை ஒன்று தமிழக இலக்கிய மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.

 

 

அந்தக் கட்டுரையில், ‘அகல் விளக்கு’ மற்றும் ஆங்கிலத்தில் ‘ஃபீனிக்ஸ்’ ஆகிய பதிப்பகங்களின் பெயரில் பல போலி எழுத்தாளர்களின் பெயர்களில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாகவும் அவர் அம்பலப்படுத்தியிருந்தார். குறிப்பாக, அந்தப் புத்தகங்களை எழுதியவர்களின் பெயர்களாக ‘விஜய் திரிஷா’, ‘திரிஷா விஜய்’, ‘அஞ்சலி சூர்யா’, ‘சூர்யா அனுஷ்கா’, ‘அனுஷா தனுஷ்’ போன்ற திரை நட்சத்திரங்களின் பெயர்களை இணைத்துப் போலிப் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தது வாசகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

 

பெரியார் அறிவுலகத்தில் போலிப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்திற்கு முதலமைச்சர் விஜய், அமைச்சர் ராஜ்மோகன், எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். முந்தைய தி.மு.க ஆட்சியில் இந்த முறைகேடு நடைபெற்றதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர் ராஜ்மோகன், இது குறித்து விசாரிக்கச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என அறிவித்ததோடு, பெரியார் அறிவுலகத்தில் உள்ள போலிப் புத்தகங்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டார்.

 

 

கோவையைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் மாநிலத்தின் பிற பொது நூலகங்களிலும் இதேபோன்று போலி புத்தகங்கள் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஜீன் டிரேஸ் மற்றும் மகாகவி பாரதியார் ஆகியோரின் பெயர்களிலும் போலிப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு நூலகங்களில் வைக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாசகர்களுக்குத் தவறான தகவல்களைத் தரும் இந்த நூல்களை உடனடியாக நீக்க வேண்டும் என எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

 

இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், பொது நூலகங்களில் சந்தேகத்திற்குரிய வகையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள போலிப் புத்தகங்களைப் பட்டியலிட்டு, அவற்றை வாசகர்கள் பயன்படுத்த முடியாதவாறு உடனடியாக அகற்ற வேண்டும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.இதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் ‘அகல் விளக்கு’ மற்றும் ‘ஃபீனிக்ஸ்’ பதிப்பகங்களைச் சேர்ந்த 2,200 சந்தேகத்திற்குரிய புத்தகங்களை நூலகத் துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட நூலகங்களிலும் நடத்தப்பட்ட தீவிரத் தணிக்கையின் முடிவில், ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி நூல்கள் உட்பட மொத்தம் 70,674 போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு தற்போது தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon