கோவை தவெக நிர்வாகி மீது வழக்குப் பதிவு!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட காரமடை த.வெ.க ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மீது அதே கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரமடை பகுதி தவெக ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் கருப்புசாமி. அதேபகுதி தவெக ஊராட்சி செயலாளராக பதவி வகித்து வந்த பெண் நிர்வாகி, சில மாதங்களுக்கு முன்பு கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த தன்னை பாலியல் ரீதியாகவும், சாதி ரீதியாகவும் தவெக ஒன்றிய செயலாளர் கருப்புசாமி துன்புறுத்தினார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பெண் நிர்வாகி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (12ஆம் தேதி) புகார் மனு அளித்தார்.
இதனையடுத்து பெண் நிர்வாகியின் புகார் குறித்து மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாஸ்கரன் தலைமையிலான போலீசார் அவரது வீட்டிற்குச் சென்று நேரில் விசாரணை நடத்தினர். அதேபோல், அனைத்திந்திய ஐனநாயக சங்கத்தை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகியை அவரது வீட்டில் சந்தித்து பேசி ஆறுதல் கூறினர். இந்நிலையில், காரமடை தவெக ஒன்றியச் செயலாளர் கருப்புசாமி மீது போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




