ஞாயிற்றுக் கிழமை குரூப் 2 தேர்வு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (CCSE – Group 2 & Group 2A) முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் எழுத உள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பிரிவுகளைச் சேர்ந்த 846 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 1,647 மையங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 173 தேர்வு மையங்களில் 51 ஆயிரத்து 721 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தேர்வர்கள் எத்தனை மணிக்கு தேர்வு மையங்களுக்கு வரவேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நீங்கள் தேர்வு எழுத செல்லும் பொழுது டிஜிட்டல், எலக்ட்ரானிக், ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை அணிந்து செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் இல்லை என்றால் தேர்வறையை விட்டு வெளியேற்றப்படுவீர்கள்.
இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி குழு உறுப்பினர் ராஜ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “சாதாரண கை கடிகாரங்களை கட்டிச் செல்லுங்கள். டிஜிட்டல், எலக்ட்ரானிக், ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை அணிந்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி அணிந்து சென்றால் தேர்வறையை விட்டு வெளியேற்றப்படுவீர்கள். இது தொடர்ச்சியாக நடக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





