--- --:--:-- --

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி கிழக்கில் போட்டியா?

3

திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியா எனும் கேள்விக்கு திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதேபோல், தவெக தலைவர் ச. ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் வென்றார்.

 

 

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை தக்கவைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுகவின் மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் மற்றும் விராலிமலை ஆகிய தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

 

 

இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கு விரைவில் இடைத் தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், திமுக திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் தங்கள் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

 

இந்நிலையில், சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், ‘அப்பாவை காணோம்’ எனும் குட்டி கதையை சொல்லி முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோல்வியை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

 

அதேசமயம், புதுக்கோட்டையில் நடந்த திமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, “சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், அப்பாவை காணோம் என்கிறார். வருவார்.. எவ்வளவு விரைவாக வர வேண்டுமோ, அவ்வளவு விரைவாக மீண்டும் சட்டமன்றத்திற்கு வருவார். இது உறுதி” எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காலியாக இருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற இருக்கும் இடைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடுகிறாரா எனும் கேள்வி எழுந்தது.

 

 

இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயம் வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் செய்தியாளர்கள், “திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் நீங்கள் போட்டியா?” என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “இன்னும் முடிவெடுக்கவில்லை. அதுகுறித்து முடிவெடுத்ததும் சொல்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon