கோவையில் சூறாவளி காற்றில் சேதமடைந்த வாழைக்கு ரூ.6 இழப்பீடு..!
சூறாவளி காற்றில் சேதம் அடைந்த வாழைக்கு தலா 6 ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அதிகாரிகள் கூறியதால் கோவையில் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததில், மேட்டுப்பாளையம், சூலூர், அன்னூர், காரமடை, தொண்டாமுத்தூர் உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்த வாழை மரங்கள் சேதம் அடைந்தன. இதற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் வேளாண் அதிகாரிகளை நாடினர்.
அவர்கள் சேதம் அடைந்த ஒரு வாழை மரத்திற்கு ரூ.6 என்றும், ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 17,000 வரை இழப்பீடு வழங்குவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க எதிர்முனை இளைஞர் அணி மனு அளித்தது. அதில் இந்த தொகை சேதம் அடைந்த வாழை மரங்களை வெட்டி அகற்றக் கூட போதாது.
ஒரு வாழை மரத்தை சாகுபடி செய்து பராமரிக்க ரூபாய் 160 வரை செலவாகும் என வேளாண் துறை சொல்கிறது. அதே நேரத்தில் இழப்பீடாக ரூபாய் 6 வழங்குவதாக கூறுவது ஏற்புடையது இல்லை, அத்துடன் 100 வாழை மரங்கள் 35 மரங்களுக்கு மேல் சேதம் ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்குவதாக கூறுகின்றனர். எனவே உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும் சேதம் அடைந்த வாழை மரங்களுக்கு தலா 200 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.



