--- --:--:-- --

விஜய் தேர்தலில் ஜெயிக்கணும்… ஆசையாக இருக்கிறது – ஐஸ்வர்யா லஷ்மி

5

 நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். 233 தொகுதிகளிலும் அவரது வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எடப்பாடி தொகுதியில் மட்டும் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது. ஆனாலும், அங்கு சுயேட்சையாக நிற்கும் தனது கட்சி வேட்பாளருக்கு விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். மே 4-ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்கு எண்ணிக்கை மீதான ஆர்வம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நெல்லையில் அளித்த பேட்டியில், “நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய வாழ்த்து, பிரார்த்தனை எல்லாமே அவருக்கு உண்டு. அரசியல் குறித்து பேச வேண்டாம் என சொல்வேன். ஆனால், விஜய் மேடையில் பேசும் வார்த்தைகளை கேட்கிறேன். அவருக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை. ஆனால், மக்களுக்காக களத்துக்கு வருகிறார்.

 

மக்கள் மீது அவருக்கு அன்பு இருக்கிறது. தனக்கு மக்கள் கொடுத்த அளப்பரிய அன்பை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காக தான் அவர் அரசியலுக்கு வருகிறார். அவரது அந்த நோக்கத்தை நான் பாராட்டுகிறேன். பார்க்கும்போது நன்றாக இருக்கிறது. விஜய் தேர்தலில் வெல்ல வேண்டும். மக்களுக்கும் அதே ஆசை இருக்கிறது என்பதை மீடியாவில் பார்க்கும்போது தெரிகிறது.

 

விஜய் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது அரசியல் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. ஒரே ஒரு வருத்தம் தான். கேரளாவில் இருக்கிறேன். எனக்கு தமிழ்நாட்டில் வாக்கு இல்லை என்பது தான் வருத்தம். இந்த முறை தமிழ்நாட்டில் வாக்கு இருந்திருக்கலாமே என தோன்றியது” என்று தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா லக்ஷ்மியை பொறுத்தவரை மலையாள படங்களில் கவனம் செலுத்தியவர், விஷாலின் ‘ஆக்ஷன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். ‘ஜகமே தந்திரம்’ படத்தில் தனுஷுடன் நடித்தார். ‘பொன்னியின் செல்வன்’, சூரியுடன் ‘மாமன்’ ஆகிய படங்களில் நடித்தவர் கமலின் ‘தக் லைஃப்’ படத்திலும் நடித்திருந்தார். தமிழில் ‘கட்டா குஸ்தி’ அவருக்கு தனித்த அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Right Menu Icon