மீண்டும் சிக்கலில் செந்தில் பாலாஜி..!
தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (டான்ஜெட்கோ) கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் சுமார் 45,000 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த டெண்டர் நடவடிக்கையில் சுமார் ரூ.397 கோடி ஊழல் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் அ.தி.மு.க., வக்கீல்கள் அணி துணைச்செயலாளர் இ.சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
அதில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரியிருந்தார். இதேபோல், அறப்போர் இயக்கம் சார்பில் இந்த ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளின் இறுதிக்கட்ட விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நடந்து வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல், “டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்ததில் செந்தில் பாலாஜிக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று வாதிட்டார்.
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பு வாதங்களை முன்வைப்பதற்காக, வழக்கு விசாரணையை 15-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, கடந்த 15-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பிலும், மனுதாரர்கள் தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி தங்களது இறுதிக்கட்ட வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, மின்மாற்றி கொள்முதலில் முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் 2 வாரங்களில் அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டனர். சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை, டான்ஜெட்கோ முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.





