பல்லடத்தில் சூரியனுக்கு ‘பலம்’! * செல்வராஜ் வரவால் திமுகவினர் குஷி.. * சுறுசுறுப்பாக களமிறங்கிய உடன்பிறப்புகள்!
திருப்பூர் மாவட்டத்தின் ‘தாதா’ தொகுதி என்று சொல்லப்படும் பல்லடம் தொகுதியில் திமுக சார்பில் செல்வராஜ் களமிறக்கப்பட்டுள்ளது, அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை தந்துள்ளது. அதிமுக சார்பில் பரமசிவமும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஜூரத்தில் தகதகக்கிறது.
நூற்றுக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான விசைத்தறிகள் என எப்போதும் பிஸியாக இருக்கும் இந்தத் தொழில் நகரம் பல்லம் நகரம், இப்போது அரசியல் கட்சிகளின் கொடிகளால் ‘கலர்ஃபுல்’ ஆக மாறியிருக்கிறது.
பல்லடம் தொகுதி வரலாறு!
பல்லடம் சட்டமன்றத் தொகுதி. 1957-ல் உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதி, வெறும் நிலப்பரப்பு மட்டுமல்ல; தமிழகத்தின் பொருளாதார இன்ஜின். கோவைக்கும் திருப்பூருக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலை 67-ல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் இந்தத் தொழில் நகரம், கடந்த 20 ஆண்டுகளாக அதிமுகவின் இரும்புக்கோட்டையாகத் திகழ்கிறது.
கடந்த 2021 கணக்கின்படி, சுமார் 3,75,838 வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில், ஆண்களும் பெண்களும் சம பலத்துடன் மோதுகிறார்கள். கொங்கு வேளாளர் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருந்தாலும், தலித், நாயக்கர் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன. விசைத்தறிப் பலகைகளின் சத்தமும், கறிக்கோழிப் பண்ணைகளின் வாசனையும் நிறைந்த இந்த ஊர், அரசியல் ரீதியாகவும் எப்போதும் ‘ஹாட்’ தான்!

தீராத தாகமும், ஏறும் மின் கட்டணமும்!
பல்லடம் என்றாலே நினைவுக்கு வருவது ‘பிஸியான’ மனிதர்கள். ஆனால், அவர்களின் முன்னே இருக்கும் பிரச்சினைகளோ அதைவிடப் பெரியவை. இத்தொகுதியின் பிரதானப் பிரச்சினையே குடிநீர் தட்டுப்பாடுதான். ‘2-வது கூட்டுக்குடிநீர் திட்டம்’ அறிவிக்கப்பட்டுப் பல காலம் ஆகியும், இன்னும் மக்களின் தாகம் தீரவில்லை.
அடுத்ததாக, விசைத்தறி உரிமையாளர்களின் குமுறல். உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் தறிகள் முடங்கிக் கிடக்கின்றன. உற்பத்தி செய்யப்படும் ‘காடா’ துணிகளுக்கு முறையான சந்தை வசதி இல்லாததால், இடைத்தரகர்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள் நெசவாளர்கள்.
போக்குவரத்து நெரிசலில் பல்லடம் நகரம் திணறுகிறது. அவசரத் தேவைக்கு ஒரு மேம்பாலமோ, சுற்றுச்சாலையோ இல்லாதது பொதுமக்களின் பெரும் ஆதங்கம். அரசு மருத்துவமனை வெறும் ‘பெயரளவில்’ மட்டுமே செயல்படுவதாகவும், மேல் சிகிச்சைக்காக கோவைக்கோ திருப்பூர் அரசு மருத்துவமனைக்கோ ஓட வேண்டியிருப்பதாகவும் மக்கள் குமுறுகிறார்கள்.

விவசாயிகளைப் பொறுத்தவரை, பிஏபி பாசனத் திட்ட விரிவாக்கம் என்பது பல தசாப்த கால கனவு. இடுவாய் குப்பை கிடங்கு பிரச்சினை முதல், நிலத்தடி நீர் பாதிப்பு வரை பல்லடத்தின் பிரச்சினைகள் ஒரு நீண்ட நெரிசல் மிகுந்த சாலையைப் போன்றவை.
பல்லடத்துக்கு திமுக அரசு செய்தது என்ன?
கடந்த 2021 தேர்தலில் அதிமுகவின் எம்.எஸ்.எம். ஆனந்தன் வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் தொகுதிக்குள் ஒருவித ‘நிழல் யுத்தம்’ நடந்து வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, பல்லடம் நகராட்சியில் பல்வேறு சாலைப் பணிகள் மற்றும் தெருவிளக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, நகராட்சித் தலைவர் பதவி திமுக வசம் இருப்பதால், உள்ளூர் அளவில் வார்டு வாரியாகச் சிறிய அளவிலான வடிகால் மற்றும் பூங்கா புனரமைப்புப் பணிகள் நடந்துள்ளன.
தற்போதைய எம்.எல்.ஏ ஆனந்தன் தரப்பில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சில பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. இருப்பினும், மின் கட்டண உயர்வு விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக விசைத்தறியாளர்கள் நடத்திய போராட்டங்கள் ஆளுங்கட்சிக்குச் சிறு பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.

ஆனால், திமுக அரசு கொண்டு வந்த ‘மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம்’ மற்றும் ‘புதுமைப் பெண்’ திட்டங்கள் தொகுதியின் பாமர மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தத் திட்டங்களின் பலனைச் சொல்லித் தான் திமுக இப்போது ஓட்டுக் கேட்கத் தயாராகி வருகிறது.
செல்வராஜ் எனும் ‘செயல் புயல்’!
திமுக தலைமை இந்த முறை பல்லடத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. அதற்காகவே, திருப்பூரின் அனுபவமிக்க முகமான செல்வராஜைக் களமிறக்கியிருக்கிறது. காரணம்பேட்டையில் அவருக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பைப் பார்த்தால், பல்லடம் தொகுதி இப்போதே தேர்தல் மோடுக்கு மாறிவிட்டது புரிகிறது.

வெளியூர்க்காரர் என்ற விமர்சனத்திற்குச் சவுக்கடி கொடுக்கும் வகையில் செல்வராஜ் பேசும்போது, “நான் எங்கே இருந்தோ வந்தவன் அல்ல. பல்லடம் அருகே உள்ள கிடாத்துறைப்புதுார் தான் எனது பூர்வீகம். 50 ஆண்டுகளாக மக்கள் சேவையில் இருக்கும் என்னை, முதல்வர் ஸ்டாலின் பல்லடம் மக்களின் குறைகளைத் தீர்க்க அனுப்பி வைத்திருக்கிறார். திருப்பூர் மாநகராட்சியில் நான் பார்த்த பணிகளை விட, 39 ஊராட்சிகளைக் கொண்ட இந்தப் பரந்து விரிந்த பல்லடம் தொகுதியில் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் என்பதை உணர்ந்திருக்கிறேன்,” என்றார் நம்பிக்கையுடன்.
சவால்களை முறியடிப்பேன்: செல்வராஜ் சபதம்!
தன்னுடைய தேர்தல் வியூகம் குறித்து செல்வராஜ் மேலும் கூறுகையில், “அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படுவதையெல்லாம் இந்த முறை மக்கள் தகர்ப்பார்கள். கடந்த கால எம்.எல்.ஏ-க்கள் செய்யத் தவறிய பணிகளை நான் செய்வேன். குறிப்பாக, இடுவாய் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு நவீனத் தீர்வு காணப்படும்.
விசைத்தறி மற்றும் கறிக்கோழிப் பண்ணையாளர்களின் கோரிக்கைகளை நேரடியாக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்ப்பேன். 2-வது கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை முடுக்கிவிட்டு, ஒவ்வொரு வீட்டுக்கும் தடையின்றித் தண்ணீர் கிடைக்கச் செய்வதே எனது முதல் இலக்கு. பல்லடத்தின் ‘பல்லாக்கு’ இந்த முறை உதயசூரியனைச் சுமக்கும்!” என்று ஆவேசமாகப் பேட்டியளித்தார்.
நான்கு முனைப் போட்டியால் யாருக்கு லாபம்?
அதிமுக சார்பில் மீண்டும் களமிறங்கும் முன்னாள் எம்.எல்.ஏ பரமசிவம், தனக்குள்ள பழைய செல்வாக்கையும், கட்சியின் வாக்கு வங்கியையும் நம்பியிருக்கிறார். இத்தொகுதியை குறிவைத்து, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் நடராஜன், செ.ம.வேலுசாமி உள்ளிட்ட பலரும் முட்டி மோதினாலும், அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் பரமசிவத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் காலம் முதல் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த பரமசிவம், தற்போது விவசாயப் பிரிவின் மாநில இணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கம், நாம் தமிழர் கட்சியின் தமிழினியன் விவசாயிகளின் போராட்டங்களில் பங்கெடுத்தவர் என்பதால், இளைஞர்களின் வாக்குகளைக் குறிவைக்கிறார். தவெக சார்பில் ராம்குமார் களமிறங்கியிருப்பது, இளைய தலைமுறை வாக்குகளைப் பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் முடக்கம், விலைவாசி உயர்வு போன்ற சவால்களுக்கு நடுவே, பல்லடத்தின் ‘பவர்’ யாருக்கு என்பதை இங்கிருக்கும் தொழிலாளர்களே தீர்மானிப்பார்கள். இப்போதைக்கு சூரியனின் தாக்கமே பல்லடத்தில் அதிகமாக உள்ளது. எனினும் 2 வாரங்களில் போக்கு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. செல்வராஜ் மீண்டும் சட்டமன்றம் செல்வரா? அல்லது அதிமுக கோட்டைதான் என்று மீண்டும் மக்கள் சொல்வார்களா என்பது, மே மாதம் தேர்தல் முடிவுகள் வரும்போது தெரியும்.





