அரசு பேருந்தை இயக்க முயன்ற மன நலம் பாதிக்கப்பட்ட பெண்..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள புதிய பேருந்து நிலையத்தில், அரசு பேருந்தை பெண் ஒருவர் இயக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து கேரளா, வால்பாறை மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளுக்குத் தினசரி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது அமாவாசை காலத்தை முன்னிட்டு, ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்காகச் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், கடந்த நேற்று முன்தினம் இரவு ஆனைமலைக்குச் செல்லத் தயாராக நின்றிருந்த ஒரு சிறப்பு பேருந்தின் கண்ணாடியை பெண் ஒருவர் கல் வீசி உடைத்தார்.
இது குறித்துத் தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையப் போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அந்தப் பெண்ணை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், நேற்று காலை பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்வோர் எனப் பேருந்து நிலையம் கூட்டமாக இருந்த சமயத்தில், அந்தப் பெண் மீண்டும் அங்கு வந்துள்ளார். மாசாணி அம்மன் கோவிலுக்குச் செல்ல பக்தர்கள் காத்திருந்த வேளையில், திடீரென அங்கு நின்ற ஓர் அரசு பேருந்துக்குள் ஏறிய அவர், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்க முயற்சி செய்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நடத்துநர்கள், பேருந்து நகராமல் இருக்க உடனடியாக டயர்களுக்கு அடியில் கற்களைப் போட்டனர். அந்தப் பெண் பேருந்தின் அலாரத்தை விடாமல் ஒலிக்கச் செய்ததால் பயணிகள் ஆத்திரமடைந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர் பேருந்திலிருந்து கீழே இறக்கப்பட்டார்.
கீழே இறங்கியும் அமைதியாகாத அந்தப் பெண், திடீரென பேருந்து டயருக்கு அடியில் படுத்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டார். மீண்டும் போலீசார் வரவழைக்கப்பட்டு, அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்தப் போராட்டத்தினால் பொள்ளாச்சி பேருந்து நிலையப் பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.





