--- --:--:-- --

கோவை வாளையார் அணை சேற்றில் சிக்கி மாணவர் பலி..!

10

கோவை – கேரளா எல்லையில் உள்ள வாளையார் அணைக்குக் குளிக்கச் சென்ற தனியார் பொறியியல் கல்லூரி மாணவர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு நாட்களாகத் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர் ஜெரின் சஞ்சய் (21). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். நேற்று முன்தினம், ஜெரின் சஞ்சய் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து வாளையார் அணைப் பகுதிக்குச் சுற்றுலா சென்று உள்ளார்.

 

அங்கு அவர்கள் அணையில் இறங்கிக் குளித்துக் கொண்டு இருந்த போது, எதிர்பாராதவிதமாக ஜெரின் சஞ்சய் ஆழமான பகுதியில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டார். உடன் இருந்த நண்பர்கள் அவரை மீட்க முயன்றும் பலன் அளிக்கவில்லை. இது குறித்துத் தகவல் அறிந்த கேரள மாநிலம் கஞ்சிகோடு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

 

நேற்று முழுவதுமாகத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தியும், நீருக்கடியில் இருந்த சேறு சிக்கிய சஞ்சயைக் கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையில், இன்று காலை ஜெரின் சஞ்சய்யின் உடல் தானாகவே நீரின் மேல் மட்டத்தில் மிதந்தது.

 

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார், மாணவரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Right Menu Icon