காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு வழக்கு: டி.எஸ்.பி.க்கு பிடிவாரண்டு
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு குற்றச்சாட்டில், மதுரையை சேர்ந்த பேராசிரியை நிகிதா கடந்த ஜூன் மாதம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் அஜித்குமாரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த விசாரணையின் போது கடுமையாக தாக்கப்பட்டதால் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையில், மானாமதுரை தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கரமணிகண்டன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்தின்போது மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீஸ்காரர் இளையராஜா ஆகியோருக்கும் இந்த கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த நான்கு பேரையும் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என சி.பி.ஐ. மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், நான்கு பேரும் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், டி.எஸ்.பி. சண்முகசுந்தரத்தை தவிர மற்ற மூவர் மட்டுமே ஆஜரானதால், அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி செல்வபாண்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீஸ்காரர் இளையராஜா ஆஜரானார்கள். டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் மீண்டும் ஆஜராகாததால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கின் அடுத்த விசாரணை வரும் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.





