ஸ்டாலின்- வேணுகோபால் ஆலோசனை நிறைவு..!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் அவரைச் சந்தித்துப் பேசினார்.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த ஆலோசனையில், காங்கிரஸ் தரப்பில் கூடுதல் தொகுதிகள் கோரப்பட்ட நிலையில், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி தி.மு.க தனது நிலையை விளக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்தை, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
மாநிலத்தில் ஆளும் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பெரிய மாற்றம் இல்லை. தே.மு.தி.க புதிதாக வந்து சேர்ந்துள்ளது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்று முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் சொன்ன பிறகும் அந்த கோரிக்கையை மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கேட்கும் நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் சென்னை வந்தார். சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிங்கள் நடைபெற்றது. இந்த சந்திப்பில் நடைபெற்ற ஆலோசனையில் கே.சி. வேணுகோபால் இடங்களை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், சட்டமன்றத் தேர்தலில் எந்தெந்த இடங்கள் தேவை என்று தொகுதிகளின் பட்டியலை அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு, கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடங்களை அதிகரிப்பது இயலாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் தி.மு.க தரப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எ.வ.வேலு, கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.





