பனிப்பாறைக்கு கீழ் புதைந்திருந்த ராணுவ தளம்..!
பல ஆண்டுகளாக பனியின் பல அடுக்குகளுக்குக் கீழே புதைந்து கிடந்த பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பண்டைய கருவிகள், விலங்குகளின் உடல்கள், இரண்டாம் உலகப் போரின் விமானங்கள், எரிமலைகள் என பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2024-ஆம் ஆண்டு இந்த பட்டியலில் ஒரு அதிசய கண்டுப்பிடிப்பு இடம்பெற்றது.
அதாவது, கிரீன்லாந்தில் ஒரு விமானப் பயணத்தின் போது நாசா விஞ்ஞானியான Chad Greene பனிப்பாறையின் அடிப்பகுதியை ரேடார் மூலம் படம் எடுத்தபோது, அதன் கீழ் இருந்த அமைப்பு அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின்னர் அது 65 ஆண்டுகள் பழமையான குளிர்போர் கால அமெரிக்க ராணுவத் தளமான ‘கேம்ப் சென்சுரி’ (Camp Century) என உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த தளம், பரந்த பனிப்பாறையின் கீழ் சுமார் 100 அடி ஆழத்தில் புதைந்து கிடந்தது. இத்தளம் கடந்த 1959 முதல் 1960- ஆம் ஆண்டு வரை ரகசியமாக அமெரிக்காவால் கட்டப்பட்டுள்ளது. Interesting Engineering வெளியிட்ட தகவலின்படி, 9,800 அடி நீளம் கொண்ட இந்த ராணுவத் தளத்தில் 21 சுரங்கப்பாதைகள் உள்ளதாம். இந்த தளத்தை ஆய்வு செய்ய நாசா, யு.ஏ.வி.எஸ்.ஏ.ஆர் (Uninhabited Aerial Vehicle Synthetic Aperture Radar) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது.
1951-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் “Defense of Greenland” என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. National Museum of Nuclear Science and History தெரிவித்ததன்படி, வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO) உறுப்புநாடுகளின் ஆயுதப்படைகள் கிரீன்லாந்தில் உள்ள வசதிகளை பயன்படுத்தி கிரீன்லாந்தையும் வட அட்லாண்டிக் பகுதிகளையும் பாதுகாக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்ய இந்த ஒப்பந்தம் உதவியது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்காவிற்கு கிரீன்லாந்தில் ராணுவ தளங்களை அமைக்கும் அனுமதி கிடைத்தது.
அமெரிக்க ராணுவ பொறியாளர்கள் முதலில் பனிப்பாறையின் ஆழத்தில் பெரிய அகழிகளை தோண்டி 1,000 அடி நீளமுள்ள “Main Street” என்ற முக்கிய சுரங்கப்பாதையை உருவாக்கியுள்ளனர். அதன் பின்னர் மரக் கட்டிடங்களும் எஃகு கூரைகளும் அமைத்து கேம்ப் சென்சுரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தின் முக்கிய சிறப்பாக இருந்தது PM-2 என்ற நடுத்தர திறன் கொண்ட அணு உலை தான். கேம்ப் சென்சுரி அமெரிக்காவின் பெரிய அணு ஆயுதத் திட்டத்திற்கான மறைவுத் திட்டமாக இருந்துள்ளது.
இதைப் பற்றி டென்மார்க் அரசாங்கத்திற்கே முழுமையாகத் தெரியவில்லை. “Project Iceworm” என அழைக்கப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கமே பாலிஸ்டிக் ஏவுகணைகளை பதுக்கி வைப்பதாகும். இதற்காக கூடுதலாக 52,000 சதுர மைல் பரப்பளவில் சுரங்கப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு 60 ஏவுதள மையங்கள் அமைக்க வேண்டியிருந்தது. இத்திட்டம் பல தடைகளை சந்தித்ததால் நடைமுறைக்கு வரவில்லை. இதையடுத்து, 1967-ஆம் ஆண்டு கேம்ப் சென்சுரி முழுமையாக கைவிடப்பட்டது.





