சபரிமலை நடை அடைப்பு.. அடுத்த மாதம் 12-ஆம் தேதி மீண்டும் நடை திறப்பு..!
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நிறைவடைந்தையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டது. சபரிமலையில் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம்தேதி மண்டல பூஜை நடைபெற்றதை தொடர்ந்து, கடந்த 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற்றது. ”
லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் கூடி மகரஜோதியை தரிசித்தனர். இதையடுத்து, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஐயப்பனை தரிசித்து வந்தனர். இந்நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று இரவு 10 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெறது. இதில், பந்தளம் ராஜ குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதன் பின்னர், தை மாத வழிபாடுகள் முடிந்ததால் கோயில் நடை அடைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 17-ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





