ஆளுநர் அறிக்கையை படித்த இ.பி.எஸ்
தமிழக சட்டப்பேரவையின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அவர் சாடினார். குறிப்பாக போதைப்பொருள் புழக்கம், தற்கொலைகள் அதிகரிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஆளுநர் அறிக்கையை மேற்கோள் காட்டி பேசினார்.
உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், தொழில்துறை முதலீடுகளில் தமிழகம் பின் தங்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் தவறான புள்ளிவிவரங்கள் இருந்ததால், உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் ஆளுநர் செயல்பட்டதாக அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் முன்கூட்டியே திட்டமிட்டு ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததாகவும், இது மரபை மீறிய செயல் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தின் உண்மை நிலையை மறைக்கப் பார்க்கும் இந்த திமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறி அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக அவர் விளக்கமளித்தார்.





