அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரம்
மதுரை அவனியாபுரத்தில் வரும் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள குருநாதசுவாமி – அங்காள ஈஸ்வரி கோயில் எம்.ஜி.ஆர். சிலை முன்பு தற்காலிக வாடிவாசல் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் மேடை, வாடிவாசல், பேரிகார்டுகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்படுகின்றன. கால்நடைகள் பராமரிப்புத்துறை சார்பில் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை மையமும் அமைக்கப்படுகிறது. மேலும், வாடிவாசல் பின்புறம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி முதல் வாடிவாசல் வரை காளைகள் ஒழுங்காக வரிசையாகச் செல்லும் வகையில் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன.
அதேபோல், அவனியாபுரம் பிரிவிலிருந்து பெரியார் நகர் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் பார்வையாளர்கள் பாதுகாப்பாக நிற்க மூங்கில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காளைகள் பரிசோதனை மையம், மாடுபிடி வீரர்கள் சோதனை மையம் உள்ளிட்ட பகுதிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த அனைத்து பணிகளும் மாநகராட்சி சார்பில் ரூ.67 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தொடங்கிய நிலையில், நேற்று காளைகள் சீறிப்பாயும் முக்கிய வாடிவாசல் அமைக்கும் பணிகள் ஆரம்பமானது. சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள தென்னை மரத் தூண்களை பயன்படுத்தி பாரம்பரிய முறையில் வாடிவாசல் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





