தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக அன்வர்ராஜா நியமனம்!
தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக அ.அன்வர்ராஜா நியமிக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா, அண்மையில் தி.மு.க.வில் இணைந்தார்.
அ.தி.மு.க.வில் இருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த அவர், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி வைத்ததால் அதிருப்தியில் இருந்ததாக தெரிவித்தார்.
மேலும் கொள்கைகளில் இருந்து தற்போதைய அ.தி.மு.க. தடம் புரண்டுள்ளது எனவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிகரான தலைவர் அ.தி.மு.க.வில் இல்லை எனவும் அன்வர் ராஜா தெரிவித்தார்.
இந்நிலையில் தி.மு.க.வின் இலக்கிய அணித் தலைவராக முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க. இலக்கிய அணித் தலைவராகச் செயல்பட்டு வந்த புலவர் இந்திரகுமாரி அவர்களுக்குப் பதிலாக, அ.அன்வர்ராஜா நியமிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





