--- --:--:-- --

வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் திடீர் ராஜினாமா..!

1

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்தே தமிழ்நாடு அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. 233 தொகுதிகளில் போட்டியிட்ட தவெக 107 இடங்களில் வென்றது (திருச்சி கிழக்கு நீங்கலாக). ஆனாலும், பெரும்பான்மைக்கு தேவையான 118 கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் இருந்துவந்தது. இதனைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க திமுக கூட்டணி கட்சிகளின் தயவை நாடியது தவெக. அழைப்பு வந்ததும், திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் 2 அமைச்சர்களை பெற்றது.

 

இதேபோல் திமுக கூட்டணியில் இருந்த விசிக, ஐ.யூ.எம்.எல். ஆகியவையும் தவெக அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றன. இதில், சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ. ஆகியவை வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவை தவெக அரசுக்கு கொடுத்தது. இதற்கிடையில், அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களும், தற்போதைய எம்.எல்.ஏ.க்களுமான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான சுமார் 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக ஆதரவு நிலைபாட்டை எடுத்தனர். இதனால், மீண்டும் அதிமுகவில் பிளவா எனும் சந்தேகம் எழுந்துவந்தன. ஆனால், இறுதியில் அந்த அணி அமைச்சரவையில் இடம்பெறாமல்போனது.

 

 

இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புடன் சமாதான பேச்சுவார்த்தை என்ற செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பில் செயல்பட்டுவந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் இன்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர். மூன்று எம்.எல்.ஏ.க்களும், தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர்.

 

 

ராஜினாமா கடிதத்தை கொடுத்த கையோடு நேராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்த மூவரும், தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். ஏற்கனவே திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தனது எம்.எல்.ஏ. பதவியை தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய மூன்று தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அடுத்ததாக இந்தத் தொகுதிகளும் காலியானதாக தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும்.

 

தற்போதைக்கு தமிழ்நாட்டில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் சூழலில், தொடர்ந்து சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் வேறு யாரேனும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்களா என்பது வரும் காலங்களில் தெரியவரும். இந்தச் சூழலில் தற்போதைக்கு நான்கு தொகுதிகளுக்கு தமிழ்நாட்டில் இடைத் தேர்தல் நடக்கும் வாய்ப்பு இருந்துவருகிறது.

Leave a Reply

Right Menu Icon