--- --:--:-- --

வீட்டின் சாவி தொலைந்ததால் விபரீத முயற்சி..!

3

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டின் சாவி தொலைந்ததால், மது போதையில் புகைக்கூண்டு வழியாக வீட்டுக்குள் செல்ல முயன்றவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த பிரபாகரன். இவர் மது போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

 

இதனால், விரக்தியடைந்த மனைவி, கணவனிடம் இருந்து விலகி அவரது தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சோகத்தில் சுற்றித்திரிந்த பிரபாகரன் தனது மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியிடம் சமாதானம் பேசியுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு காலையில் வந்து அழைத்துச் செல்லுமாறு பிரபாகரனிடம் அவரது மனைவி கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மதுபோதையில் தனது வீட்டுக்கு மீண்டும் பிரபாகரன் வந்துள்ளார். அப்போது, வீட்டின் சாவி தொலைந்ததால் என்ன செய்வதென்று புரியாமல் மதுபோதையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிந்துள்ளார். பின்னர் ஒருவழியாக தனது வீட்டின் மாடியின் புகைப்போக்கி வழியாக வீட்டிற்குள் சென்றுவிடலாம் என எண்ணியுள்ளார். அதன்படி வீட்டின் மாடியில் இருந்த புகை குண்டின் வழியாக வீட்டுக்குள் செல்ல முயன்றுள்ளார்.

இதையடுத்து வீட்டின் புகை கூண்டின் வழியாக மெல்லமெல்ல வீட்டிற்குள் சென்றுகொண்டிருந்தார். ஆனால் அவர் நினைத்ததோ வேறு நடந்ததோ வேறு. புகைக்கூண்டின் மேல்புறம் அகலமாகவும் உள்புறம் குறுகலாகவும் இருந்துள்ளது. இதனால் புகைக்கூண்டின் பாதியில் பிரபாகரன் மாட்டிக் கொண்டார். இதனால் வேறு வழியின்றி வீட்டின் மாடிக்கே சென்றுவிடலாம் என மேலே வர முயற்சி செய்துள்ளார். ஆனால் புகைக்கூண்டினுள் வசமாக அவர் சிக்கிக்கொண்டார்.

ஒருகட்டத்தில் என்ன செய்வதென்று புரியாமல் மதுபோதையில் அலறித்துடித்துள்ளார். ஆனால் அவர் அதில் சிக்கியிருப்பது யாருக்கும் தெரியவில்லை. இதனைத்தொடர்ந்து நேரம் செல்ல செல்ல அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மூச்சி விட முடியாமல் அவதிப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, காலையில் கணவர் வரவில்லை என்பதை அறிந்த மனைவி மதியம் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது தண்ணீர் வாளிக்குள் கிடந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து பார்த்துள்ளார்.

 

பின்னர் தனது கணவன் வெகுநேரம் வீட்டில் இல்லாததை பார்த்து அக்கம்பக்கத்தில் விசாரித்து தேடிப்பார்த்துள்ளார். ஆனால் அவர் எங்கும் கிடைக்காததால் வீட்டிற்குள் சென்று எதார்த்தமாக பார்த்துள்ளார்.அப்போது புகைக்கூண்டில் இறந்த நிலையில் கணவர் தொங்கிக் கொண்டிருப்பது பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் வந்து புகை கூண்டை உடைத்து பிரபாகரன் உடலை மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். வீட்டின் சாவி தொலைந்ததால், மது போதையில் புகைக்கூண்டு வழியாக வீட்டுக்குள் செல்ல முயன்றவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Right Menu Icon