அரியலூர் மாவட்டம் பின்தங்கியதற்கு ஆட்சியாளர்கள் காரணம் – அண்ணாமலை
பிரதமரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கோரியது பற்றி தனக்கு தெரியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பிரதமரின் தமிழக வருகை வரலாற்று முக்கியத்துவம் மிக்கது என்று கூறினார். நல்ல மாவட்டமான அரியலூர் பின்தங்கி உள்ளது என்றும் ஆட்சியாளர்கள் ஏதோ காரணமாக அரியலூர் மாவட்டத்தில் தனி கவனம் செலுத்தவில்லை என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
மேலும், அரியலூரை தமிழகத்தின் பெருமையாக பார்க்கிறோம் எனவும் பிரதமரின் வருகையால் சோழபுரம் ஊரின் நிலைமை மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல், தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவுநேர விமான சேவை தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் தூத்துக்குடி மக்களின் கனவு நிறைவேறி உள்ளது என்றும் கூறினார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு இருந்தாரா என்பது எனக்கு தெரியாது என்றும் அண்ணாமலை வெளிப்படுத்தினார். இதற்கிடையே, நதி நீர் இணைப்பு என்பது பா.ஜ.க. நிலைப்பாடு என்றும் நிச்சயமாக அதை செய்து காட்டுவோம் என்றும் அண்ணாமலை கூறினார். மேலும், கோதாவரி – காவிரி இணைப்பு நிச்சயமாக இணைக்கப்பட வேண்டும் எனவும் இது பிரதமர் மோடியால் மட்டும்தான் நடக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளின் சிபில் ஸ்கோர் விஷயத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது எனக் கூறிய அண்ணாமலை, ஆண்டுக்கு ஒருமுறை வருமானம் வரக்கூடிய விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் போட முடியாது எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது எனக் கூறிய அண்ணாமலை, 4 ஆண்டுகள் முடிந்துள்ள என்ன செய்து உள்ளீர்கள் என்ற ரிப்போர்ட் கார்டை கொடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு மீது பழி போடாமல் சாதனைகளை முதலமைச்சர் பட்டியலிட வேண்டும் என்றும் 511 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றி உள்ளீர்கள் என்பதை சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




