திருவாடானையில் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் ஆடி கலரி உற்சவ விழா!
திருவாடானையில் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் ஆடி கலரி உற்சவ விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கானோர் பால்குடம் எடுத்து வீதி உலா வந்து பூக்குழி இறங்கினர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தென்கிழக்கு தெருவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் 95 ஆம் ஆண்டு ஆடி கலரி உற்சவ விழா ஜூலை 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுகளுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக பக்தர்கள் விரதம் இருந்து கடலில் தீர்த்தம் ஆடி நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடம் சுமந்து கோவிலில் இருந்து வீதி உலா வந்தனர்.

வேல் காவடி, பறவை காவடி எடுத்து வந்த நிலையில் கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி பக்தர்கள் நேத்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.





