நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில் விசாரணை அதிகாரிகளை அதிர்ச்சியாக்கிய தகவல்..!
நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரக விற்பனை விவகாரத்தில், போலியான சான்றிதழ்களைக் கொடுத்து அதிகாரிகளை ஏமாற்றியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி தொழிலாளர்களைக் குறி வைத்து அவர்களிடமிருந்து சிறுநீரகத்தைப் பெற்று முறைகேடாக விற்பனை நடந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு மருத்துவ திட்டப் பணிகள் இயக்குநர் வினித் தலைமையில் 4 பேர் கொண்ட தனிக்குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில், சிறுநீரகத்தை விற்றதாகக் கூறிய பெண்ணிடமும் வினித் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. அப்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய போலிச் சான்றிதழ் வழங்கி அங்கீகாரம் அளிக்கும் அரசு குழுவை ஏமாற்றியது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் அதற்காக அமைக்கப்பட்ட அங்கீகாரக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும். இதுபோன்ற அங்கீகார குழு தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே உள்ளது. நாமக்கல்லில் நடந்த இந்த அறுவை சிகிச்சைக்கு மதுரையில் உள்ள அங்கீகார குழுவிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
முதலில் அங்கீகாரக் குழுவில் உள்ள மருத்துவர்கள் தவறு செய்தார்களோ என்ற எண்ணத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இந்த மோசடி கும்பல் போலியான சான்றிதழ்களைத் தயாரித்து அங்கீகாரக் குழுவை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
மேலும் பெரம்பலூர், திருச்சியைச் சேர்ந்த மருத்துவமனைகளில் வைத்து இதற்கான அறுவை சிகிச்சைகள் நடைபெற்றதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தி உள்ளது விசாரணைக் குழு.
இதற்கிடையே, சென்னை சுகாதாரத்துறை சட்டப்பிரிவு இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரேசன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரும் சிறுநீரக விற்பனை குறித்து மறைமுக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று, நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் ராஜ்மோகன் உள்ளிட்டோரைக் கொண்ட மற்றொரு குழுவினர் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.





