--- --:--:-- --

உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தினருக்கு ஆர்.சி.பி. அணி இழப்பீடு அறிவிப்பு..!

1

பெங்களூருவில் ஆர்.சி.பி. அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆர்.சி.பி. அணி இழப்பீட்டை அறிவித்துள்ளது. இதேபோன்று, காயமடைந்தவர்களுக்கும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதன் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.இதனையடுத்து, பெங்களூருவில் நேற்று வெற்றிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 

ஆர்.சி.பி. அணி ரோடு ஷோ நடத்தினால் பெரிய அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொண்டு, ரோடு ஷோவுக்கு கர்நாடக அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆர்.சி.பி. அணிக்கு மட்டும் பாராட்டு விழாவாக சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.அதே நேரத்தில், மைதானத்திற்கு வெளியே இலட்சக்கணக்கில் மக்கள் குவிந்ததால் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

 

இதில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்தனர். ஆர்.சி.பி. அணி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.கட்டுக்கடங்காத கூட்டம் வரும் எனத் தெரிந்தும் முன்கூட்டியே உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜு சுக்லா இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.

 

கர்நாடக அரசு தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கர்நாடக கிரிக்கெட் சங்கமும் தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், ஆர்.சி.பி. அணி தரப்பிலிருந்து 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Right Menu Icon