பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு..!
பொள்ளாச்சி வழக்கின் விசாரணை அனைத்தும் நிறைவடைந்த நிலையில் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் பல பெண்களைக் குறி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய சம்பவம் அம்பலமானது.
பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அதனை வீடியோ எடுத்தும், பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களிடம் கெஞ்சுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாட்டையே உலுக்கிய இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரன்பால், பாபு மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிறப்பு வழக்காக நடத்தப்பட்டு வந்தது.
கைது செய்யப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கோவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முழுவதும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியில் வன்கொடுமை வழக்கில் மே 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் நிறைவடைந்த நிலையில் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார்.





