--- --:--:-- --

வக்பு சட்ட இடைக்கால தடைக்கு விஜய் வரவேற்பு..!

2

வக்பு வாரிய சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை உத்தரவை தவெக தலைவர் விஜய் வரவேற்றுள்ளார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

 

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வக்ஃப் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மத்தியில் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டது.

 

மத்திய அரசின் புதிய வக்பு சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாக கூறி பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.உச்சநீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்,, விசிக, ஆம் ஆத்மி, மஜ்லிஸ் கட்சி, முஸ்லிம் லீக், விஜய்யின் தவெக, என அரசியல் கட்சிகள் உட்பட மொத்தம் 73 வழக்குகள், வக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கேவி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய மூவர் பெஞ்ச் இன்று இந்த 73 வழக்குகளையும் விசாரிக்க தொடங்கியதுஇந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

மேலும், வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய உறுப்பினர் நியமனமும் செய்யக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. வக்ஃப் வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்வதிலும், வக்ஃப் நிலங்களைக் கையகப்படுத்துதல் ஆகியவற்றில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது.

 

மேலும், வக்ஃப் சட்ட திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 5 ரிட் மனுக்கள் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும், முக்கிய சட்ட கேள்விகளை எழுப்பும் மனுக்களை விசாரித்தே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுகள், வக்பு வாரியம், 7 நாட்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மே 5 ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

வக்பு வாரிய சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை உத்தரவை தவெக தலைவர் விஜய் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

 

இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon