--- --:--:-- --

அமைச்சர் பொன்முடி பேச்சு.. வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

1

அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் அவருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடியின் பேச்சை நீதிமன்றத்தில் திரையிட செய்த நீதிபதி, “இந்தப் பேச்சு முழுக்க முழுக்க துரதிர்ஷ்டவசமானது” என்றும் “அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

 

அவரது பேச்சு பெண்களை, சைவ வைணவ மதங்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும் இல்லாவிட்டாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதன்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது என சுட்டிக்காட்டினார்.

 

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் பொன்முடியின் பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என தமிழக டிஜிபி மாலை 4:45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.இந்நிலையில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி இந்த விவகாரம் தொடர்பான வாதத்தை முன்வைத்தார்.

 

அப்போது அவர், இந்த விவகாரம் தொடர்பாக மொத்தம் ஐந்து புகார்கள் பெறப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். மேலும், டிஜிபி காணொளி வாயிலாக ஆஜராவார் எனத் தெரிவித்தார். ஆனால், டிஜிபி ஆஜராகவில்லை.இதனைக் கேட்டுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஒரு புகார் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யுங்கள். கூடுதல் வழக்குகள் பதிவு செய்தால் விசாரணை நீர்த்து போய்விடும்.

 

புகார் இல்லாமலேயே நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். என்ன நடவடிக்கை என்பது குறித்து வரும் 23ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும். வழக்கு பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும்” என எச்சரித்து தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon