சிபிஎம் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு..!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு, விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது.
மூன்றாவது நாளான இன்று, புதிய மாநில குழு தேர்வு, மாநில கட்டுப்பாட்டு குழு தேர்வு, அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு ஆகியவை நடைபெறுகின்றன. இதில் தற்போதைய மாநில செயலாளராக உள்ள கே. பாலகிருஷ்ணன் மாற்றப்பட்டு புதிய மாநிலச் செயலாளர் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவர் மூன்று முறை மாநில செயலாளர் பதவி வகிக்கலாம் என்ற விதி உள்ள நிலையில், பாலகிருஷ்ணன் இரு முறை மாநில செயலாளர் பதவி வகித்துள்ளார். எனினும் அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.இந்நிலையில், புதிய மாநிலச் செயலாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவு புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 80 நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பெ.சண்முகம் புதிய மாநிலச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
திருச்சி லால்குடியைச் சேர்ந்தவர் இந்த சண்முகம். மாணவ பருவம் முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டு வரும் பெ.சண்முகம், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக உள்ளார். தருமபுரி வாச்சாத்தியில் பழங்குடி மக்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலைக் கண்டித்து நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தவர் பெ.சண்முகம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




