அமைச்சர்னு தெரியாது,வேலையப் பாருய்யானு சொன்னேன் : வைகோ விளக்கம்
ம.தி.மு.க.வை யாராலும் அழிக்கவோ, கரைக்கவோ முடியாது என்றும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்கத் தான் தயாராக இருப்பதாகவும், திமுக அதற்குத் தயாரா என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சவால் விடுத்துள்ளார்.கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, “சில ஊடகங்கள் திமுகவிற்கு ஆதரவாக, அவர்களின் ஏஜெண்டுகளாகச் செயல்படுகின்றன. நீங்கள் உண்மையான பத்திரிகையாளர்களாக இருந்தால், நான் பேசும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
திமுகவுடன் இனி கூட்டணியில் இருக்கக் கூடாது என்று எங்கள் கட்சியின் பொதுக்குழுவில் எடுத்த முடிவின் அடிப்படையில்தான் வெளியேறினேன். முழுக்க முழுக்கக் கொள்கைக்காகவே இந்த முடிவை எடுத்தேன்.மதிமுகவை யாராலும் அழிக்கவோ, கரைக்கவோ முடியாது. இந்த இயக்கத்தை அழிக்க மறைந்த கருணாநிதியே எவ்வளவோ முயற்சி செய்தார்; ஆனால் அவராலேயே முடியவில்லை. மேகதாது பிரச்சினைக்காக முதன்முதலில் குரல் கொடுத்துப் போராடியவன் இந்த வைகோதான்.
பிரதமர் மோடி எனக்குப் பல்வேறு உயரிய வாய்ப்புகளை வழங்கத் தயாராக இருந்தார். ஆனால், கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரைக் கூட்டணிக்குள் அழைத்து வந்தது தவறு என்று சுட்டிக்காட்டியே அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறினேன்” எனத் தெரிவித்தார். தன்னை நடிகர் வடிவேலுவுடன் ஒப்பிட்டுப் பேசுவது குறித்துக் கேட்டதற்கு, “வடிவேலுவுடன் என்னை ஒப்பிட்டுப் பேசுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், விஜயகாந்தை தமிழகம் முழுவதும் அழைத்துச் சென்று பேச வைத்துவிட்டு, தங்களின் வேலை முடிந்ததும் அவரை அப்படியே விட்டுவிட்டார்கள். அதேபோல, சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி வடிவேலுவையும் ஏமாற்றிவிட்டார்கள்” என விமர்சித்தார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து திமுகவைக் கடுமையாகச் சாடிய வைகோ, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வெளியான தீர்ப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தமிழகத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. குறிப்பாக, தூத்துக்குடியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. அந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளி மூன்று முறை ஜாமீனில் வெளியே வந்தது எப்படி?
கிரீஸ் நாட்டில் போய் திருமணம் நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? அன்று ஜெயலலிதா அணிந்திருந்த நகைகள் குறித்து ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து விமர்சித்தவர்கள், இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து ஏன் வாய் திறந்து கேள்வி எழுப்பவில்லை? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக நேருக்கு நேர் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்; திமுக அதற்குத் தயாரா?” எனச் சவால் விடுத்தார்.
தற்போதைய ஆட்சி குறித்துப் பேசிய வைகோ, “தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எதுவும் ஆந்திராவுக்குச் செல்லவில்லை. தற்போதைய முதலமைச்சர் விஜய் மிகவும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருகிறார். ஊழல்வாதிகள் யாரும் முதலமைச்சரை நெருங்கவே முடியாது” என்று பாராட்டுத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது மறைந்த கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு இறுதி ஊர்வலத்தில் விஜய் முன்னிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபனைத் தடுத்து நிறுத்தி மிரட்டியதாக வெளியான வீடியோ குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்குப் பதிலளித்த வைகோ:”அவர் அமைச்சரா இல்லை யார் யார் என்று எனக்குத் தெரியாது. தேவை இல்லாமல் கையைக் குறுக்கே விட்டார்; விலகி நிக்கும்படி கூறினார். அதனால் ‘உன் வேலையைப் பார்த்துட்டுப் போ’ என்று சொன்னேன்.”
📱 Share on WhatsApp 𝕏 Share on X





