தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு..!
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை வடக்கு ஆந்திரா- தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில், கலிங்கபட்டினத்திற்கு அருகே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
அதேபோல், நாளை முதல் வரும் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





