விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – அதிமுக புறக்கணிப்பதாக அறிவிப்பு
விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஜூலை 10ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக போட்டியிடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பாமக அந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும் என நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளராக மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டபோது 41,428 வாக்குகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இது பதிவான வாக்குகளில் சுமார் 23.19 சதவீதமாகும்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் அபிநயா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பிரதான எதிர்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




