தமிழ் புதல்வன் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் திட்டம்..!
தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டின் போது, நிதியமைச்சர் அறிவித்த “தமிழ் புதல்வன்” என்ற புதிய திட்டம், எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு விடையளித்துள்ளார் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு தொடக்க நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தைப்போல், மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் “தமிழ் புதல்வன் திட்டம்” வரும் ஜூலை மாதம் தொடக்கப்படும் என்றார்.
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் 100 சதவீதம் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு அரசின் நோக்கம் என்றும் இடைநிற்றல் இருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயில கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளதாகவும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பெருமிதம் தெரிவித்தார்.
புதுமைப்பெண் திட்டம் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் மாநிலம் முழுவதும் ஆண்டுக்கு 30,000 மாணவிகள் கூடுதலாக உயர்கல்வியில் சேர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 20-25% கல்லூரி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அந்த திட்டத்தின் தொடர்ச்சியாக தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கபட உள்ளது.
பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற நடப்பு நிதியாண்டில் ரூ.360 கோடி நிதியையும் தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




