காங்கிரஸின் அனைத்து சதி திட்டங்களையும் பாஜக முறியடிக்கும்..!
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் நீதி கேட்டு போராடி வருகின்றனர். ஆனால், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு, இதுகுறித்து துளியும் கவலைப்படவில்லை. வாக்கு வங்கி அரசியல் குறித்து மட்டுமே சிந்திக்கிறது என காங்கிரஸை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘‘ஒரு காலத்தில் அரசர்களும், ஆட்சியாளர்களும் மக்களின் நிலங்களை பறித்தனர். இதை காங்கிரஸ் கட்சி தடுத்து நிறுத்தியது. நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்து, ஜனநாயகத்தை காப்பாற்றியது. அரசியலமைப்பு சாசனத்தை வெற்றிகரமாக அமல்படுத்தியது’’ என்று கூறினார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அமித் மாள்வியா விமர்சிக்கையில், ‘‘நாட்டை ஆண்ட ராஜபுத்திர மன்னர்களை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசியுள்ளார். இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று கோபமாக தெரிவித்தார்.இந்நிலையில், கர்நாடகாவின் பெலகாவி உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர்மோடி நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அங்கு பேசிய அவர், “கொரோனா பெருந்தொற்று காலத்தில் உள்நாட்டிலேயே மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, நாடு முழுவதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது தடுப்பூசி குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பின. இந்தியாவின் சாதனைகளை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விரும்பவில்லை.
வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செல்லும் காங்கிரஸ் தலைவர்கள், இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பேசுகின்றனர்.” எனக் கூறினார்.மேலும், “கர்நாடகாவின் ஹூப்ளியில் நேஹா என்ற இளம்பெண்ணை, பயாஸ் என்பவர் கடந்த 18-ம் தேதி படுகொலை செய்தார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் நீதி கேட்டு போராடி வருகின்றனர். ஆனால், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு, இதுகுறித்து துளியும் கவலைப்படவில்லை. வாக்கு வங்கி அரசியல் குறித்து மட்டுமே சிந்திக்கிறது.” எனக் கடுமையாக விமர்சித்தார்.தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இந்து அரசர்களை, சர்வாதிகாரிகள் என்று அவதூறாக பேசி உள்ளார் காங்கிரஸின் இளவரசர்.
மக்களின் நிலங்களை இந்து மன்னர்கள் அபகரித்ததாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். சத்ரபதி சிவாஜி, ராணி சின்னம்மா உள்ளிட்ட பல்வேறு இந்து மன்னர்களை அவர் அவமதித்து உள்ளார். முகலாய மன்னர் ஔரங்கசீப், நூற்றுக்கணக்கான இந்து கோயில்களை இடித்தார்.
ஏராளமான பசுக்களை கொன்று குவித்தார். ஆனால், ஔரங்கசீப் மற்றும் இதர முகலாய மன்னர்களின் கொடூரங்கள் குறித்து காங்கிரஸ் இளவரசர் ஒரு வார்த்தைகூட பேசுவது இல்லை. முகலாய மன்னர்களை விமர்சிக்காதது ஏன் என்பதற்கு அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.’ எனப் பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




