--- --:--:-- --

பக்தர்களுக்கு கனகசபை தரிசனத்தை மறுக்கும் பலகையை அகற்றிய அறநிலைத் துறை அதிகாரிகள்..!

1

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசிக்க கூடாது என தீட்சிதர்கள் வைத்த பலகையை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. இன்று தேரோட்டம் நடந்த நிலையில், ஜூன் 24 முதல் 27ஆம் தேதி வரை நான்கு நாட்கள் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் பதாகை வைத்தனர்.

 

இதுதொடர்பாக பக்தர்கள் புகார் அளித்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சரண்யா, நேற்று வட்டாட்சியர் செல்வகுமாருடன் சென்று பதாகையை அகற்ற முயன்றார். அப்போது தீட்சிதர்கள் பதாகையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததுடன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இதையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கோவிலில் இருந்து வெளியேறினர். இதுதொடர்பாக விளக்கம் அளித்த சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் செயலாளர் சிவராம தீட்சிதர், ’கோயில் இணை ஆணையர் வலியுறுத்தலின் பேரிலேயே பதாகை வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

 

கருவறையில் இருந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜர் தேரில் எழுந்தருள வெளியே கொண்டு வரும் பணிகள் நடைபெறும்போது, பாதுகாப்பு கருதி கனகசபை மீது பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிப்பதில்லை என்று சிவராம தீட்சிதர் குறிப்பிட்டார்.கனகசபை மீது நின்று நடராஜரை தரிசிக்க கூடாது என வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை அகற்றப்பட வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

 

கனகசபை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில், கனகசபை மீது நின்று நடராஜரை தரிசிக்க கூடாது என வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை காவல்துறை பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon