பூண்டி, ஸ்ரீ காமாட்சி அம்மன் நெசவாளர் காலனியில் 4 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா
திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி பூண்டி ரிங் ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் நெசவாளர் காலனி ஊர் பொதுமக்கள், ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் கமிட்டி மற்றும் தியாகி குமரன் நற்பணி மன்றம் சார்பில் 4 ம் ஆண்டு தைப்பொங்கல் விளையாட்டு விழா நெசவாளர் காலனியில் நடந்தது. விழாவுக்கு ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். தியாகி குமரன் நற்பணி மன்ற செயலாளர் யோகநாதன் முன்னிலை வகித்தார். தியாகி குமரன் நற்பணி மன்ற நிர்வாகி ராமு என்கிற ராமசந்திரன் வரவேற்றார்.
விழாவை முன்னிட்டு நெசவாளர் காலனியில் உள்ள அனைத்து வீடுகள் முன்பும் பெண்கள் விதவிதமான வண்ணக்கோலமிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். இதைதொடர்ந்து நடந்த விளையாட்டு போட்டிளை பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் லதா சேகர் தொடக்கி வைத்தார். விழாவில் சிறுவர், சிறுமிகளுக்கு ஓட்டப்பந்தயம் மற்றும் சாக்கு போட்டி, மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டி, ஸ்கிப்பிங், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், லக்கி கார்னர், லெமன் ஸ்பூன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கயிறு இழுத்தல், உரி அடித்தல் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இத்துடன் தனியாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு தனித்தனியாக கோலப்போட்டிகள் நடத்தபப்ட்டது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு பல்வேறு விதமாக கோலமிட்டு அசத்தினார். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். பின்னர் அப்பகுதி குழந்தைகளின் பரதம் உள்பட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை தியாகி குமரன் நற்பணி மன்ற தலைவர் சங்கர் நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, வேல்முருகன், ரமேஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




