200 போலீசார் குவிப்பு, 70 இடங்களில் சிசிடிவி பொருத்தம்!
மதுரை திருப்பரங்குன்றம் தூண் காவல்துறையினரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சிசிடிவிகள் பொருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றத்தில் காவல்துறையினர் என்னென்ன ஏற்பாடுகள் செய்து வருகின்றனர் என்பதை விரிவாகப் பார்ப்போம்.திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அரசின் சீராய்வு மனுவைத் தொடர்ந்து, மலைப் பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை, 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி பொருத்தம் எனக் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி, கடந்த ஆண்டு இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம.ரவிக்குமார் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையை நேரில் ஆய்வு செய்த பின்னர், தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சும் உறுதி செய்த நிலையில், இதற்குத் தடை கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கார்த்திகை தீபம் நாளில் (24.11.2026) கடும் நிபந்தனைகளுடன் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியது. இந்தத் தீர்ப்பை இந்து அமைப்புகள் வரவேற்ற நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
இச்சூழலில், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக திங்கள்கிழமை (23.11.2026) மாலை மதுரையில் வி.சி.க தலைவர் திருமாவளவன், ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்கும் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல், மதுரை கிரைம் பிராஞ்ச் சந்திப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த அமைதிப் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகிய இரண்டிற்கும் உச்ச நீதிமன்றக் கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி, மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி பேரணி நடைபெறும் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருநாள் அன்று ஒரு நாள் மட்டும் மலைமேல் தீபம் ஏற்றவும் தீபத்தூணில் தீபமேற்றியது தொடர்பான அறிக்கையை மூன்று தினங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதால், தற்போது திருப்பரங்குன்றம் முழுவதுமே காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிலும் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 70-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஆண்டை விடக் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பலத்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோயில் நிர்வாக அலுவலகம் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் உள்ளது.
சற்று முன்னர் மலைமேல் உள்ள தீபத்தூணில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். அவர்கள் மலைமேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில், நெல்லித்தோப்பு உள்ளிட்ட இடங்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே, நாளை (24.11.2026) மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா என்பது சஸ்பென்ஸாக உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





