மாணவர்கள் தப்பா முடி வெட்டினால் மொட்டை அடித்துவிடுங்கள்: அமைச்சர் ஜெகதீஸ்வரி
பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் ஒழுங்கற்ற தலைமுடி அலங்காரம் மற்றும் ஆடை அணியும் முறையைக் கண்டித்துள்ள சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, மாணவர்கள் முறையாக தலைமுடி வெட்டி வருவதை ஒரு விதியாகவே நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும் கல்வித் துறைக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாவது: “இன்றைய சூழலில் மாணவர்கள் தலைமுடியை வெட்டும் முறையைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் ரவுடிகளைப் போல தலைமுடியை வெட்டிக் கொண்டு திரிகிறார்கள்.
எனவே, இது தொடர்பாகப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து ஆலோசனை மேற்கொண்டு, மாணவர்களின் தலைமுடி அலங்காரத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் நேர்த்தியான முறையில் (‘Formally’) தலைமுடியை வெட்டி வர மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். தாறுமாறாக தலைமுடியை வெட்டி வரும் மாணவர்களுக்கு மொட்டை அடித்துவிடுங்கள், தவறில்லை. சொந்த பிள்ளையாக நினைத்துதான் இதைச் சொல்கிறேன்; அப்போதுதான் அவர்கள் நல்வழிப்படுவார்கள். ஏனெனில், முதல் தவறே இங்குதான் தொடங்குகிறது. மேலும், முட்டிக்கு மேல் பேண்ட் அணிவதை ஏதோ ஒரு பாணி (Style) என்று கூறிப் பின்பற்றி வருகிறார்கள்.
பெற்றோர்கள் ஏன் இவற்றை அனுமதிக்கிறீர்கள்? தவறு நம்மிடமிருந்துதான் தொடங்குகிறது. குழந்தைகள் தவறு செய்யாதபோதிலும் கூட, தவறான நண்பர்களின் சேர்க்கையால் காவல் நிலையத்திற்கும் விசாரணைக்கும் செல்லக்கூடிய சூழல் ஏற்படுகிறது. காவல் துறையினர் தோற்றத்தைக் வைத்தே தவறான முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. ஏனெனில், ஒருவரது தோற்றமே அவரது குணத்தைச் சித்தரிப்பதாக அமைகிறது. அவர் நல்லவரா, கெட்டவரா என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும்; ஆனால், பார்த்தவுடனே ஒருவரைப் மதிப்பிடுவது அவரது உடையும் தலைமுடி அலங்காரமும்தான்.
எனவே, மாணவர்களின் இந்த உடை மற்றும் தலைமுடிப் பழக்கத்தை மாற்ற வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் முறையாகத் தலைமுடி வெட்டி வருவதை ஒரு விதியாகவே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடமும் கல்வித் துறையினரிடமும் கேட்டுக்கொள்கிறேன். அமைச்சராக இல்லாமல் ஒரு தாயாகவே இதை வலியுறுத்துகிறேன். பிள்ளைகள் தவறு செய்யாமலேயே சில விஷயங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதற்குப் பெற்றோர்களின் அலட்சியமே முக்கியக் காரணம். பிள்ளைகளை அதட்டுவதாலோ, திட்டுவதாலோ, அடிப்பதாலோ மாற்ற முடியாது; அது அவர்களை மேலும் பிடிவாதக்காரர்களாகவே மாற்றும்.
அதற்குப் பதிலாக, அவர்களிடம் அன்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பேசிச் சூழலைப் புரிய வைக்க வேண்டும். “நீங்கள் இப்படி நடந்துகொண்டால் பெற்றோர் ஆகிய நாங்கள் அவமானப்பட நேரிடும்” என்று எடுத்துக்கூற வேண்டும். பெற்றோர் அணுகும் விதத்தில் மட்டுமே பிள்ளைகளைச் சரியான பாதைக்குக் கொண்டு செல்ல முடியும். இதைச் சரிசெய்தாலே மாணவர்கள் சிறப்பாகப் படித்து முதன்மை இடத்தைப் பிடிப்பார்கள்.” என்று பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





