--- --:--:-- --

உத்தரகாண்டில் பத்ரிநாத் பக்தர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து!

9

பத்ரிநாத்தில் இருந்து டேராடூனுக்கு வெள்ளிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்த போது, மோசமான வானிலை காரணமாகப் பைலட் உட்பட 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக மாவட்ட நிர்வாக வட்டாரங்கள் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழிடம் தெரிவித்துள்ளன. அக்டோபர் 30-ம் தேதி சமோலி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்திருந்தது.

 

 

அதில், ஒருசில பகுதிகளில் இடி, மின்னல், ஆலங்கட்டி மழை மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும், சமோலி மாவட்டம் முழுவதிலும் லேசானது முதல் மிதமான மழையும், பத்ரிநாத்-ஜோஷிமத் பகுதியில் லேசான மழை மற்றும் பனிப்பொழிவு இருக்கக்கூடும் என்றும் கணித்திருந்தது.

 

 

ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாகத் தகவல் வந்ததாகவும், ஆனால் அது விபத்துக்குள்ளானதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்குக் காத்திருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் கூறியது. ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் விபத்து நடந்த சூழல் குறித்த விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 

ஜோஷிமத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மனோகர் கன்யால் கூற்றுப்படி, ஜோஷிமத் பகுதியில் உள்ள சாய் கிராமத்திற்கு மேலே ஒரு ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக/விபத்துக்குள்ளானதாக மதியம் 2.21 மணிக்கு ஜோஷிமத் எஸ்.டி.எம் இடமிருந்து தகவல் கிடைத்தது.

 

 

இது தொடர்பாக உத்தரகாண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணைய (யு.சி.ஏ.டி.ஏ) ஊழியர்கள் கூறுகையில், டிரான்ஸ் பாரத் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டரின் இருப்பிடம் சாய் கிராமத்திற்கு மேலே உள்ள ராணுவ முகாம் அருகே காட்டியதாகத் தெரிவித்தனர். இந்த ஹெலிகாப்டர் பத்ரிநாத்தில் இருந்து சஹஸ்திரதாரா நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

 

 

அதில் 5 பயணிகள் மற்றும் 1 பைலட் என மொத்தம் 6 பேர் இருந்தனர். இருப்பினும், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதா அல்லது அவசரமாகத் தரையிறக்கப்பட்டதா என்பது பற்றிய முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஜோஷிமத் மற்றும் பாண்டுகேஸ்வரில் இருந்து மாநில பேரிடர் மீட்புப் படையின் (எஸ்.டி.ஆர்.எஃப்) குழுக்கள் மதியம் 2.24 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றன.

 

 

உத்தரகாண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையத்தின் (யு.டி.ஏ.டி.ஏ) தலைமை நிர்வாக அதிகாரி பிரதீக் ஜெயின் கூறுகையில், ஹெலிகாப்டர் பத்ரிநாத்தில் இருந்து மதியம் 1:14 மணிக்குப் புறப்பட்டது என்றும், ஜோஷிமத் பள்ளத்தாக்கைக் கடக்கும் போது கண்காணிப்பு அமைப்புடனான தொடர்பை இழந்தது என்றும் தெரிவித்தார். பயணிகள் விவரப் பட்டியலின்படி, அதில் இருந்த 5 பயணிகளும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய பிரதீக் ஜெயின், அவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon