டி.என்.பி.எஸ்.சி. விதிகளில் பெரிய தளர்வை அறிவித்த தமிழ்நாடு அரசு!
ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணயத்தின் மூலம் பல ஆயிரம் பேர், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை தற்போதைய விதிகளில் உள்ளதை விட 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதில் பொதுப் பிரிவினர், ஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பிரிவிலும் வயது உச்சவரம்பு இருந்துவருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு தேர்வர்களுக்கு வயது உச்சவரம்பை தளர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 1 தேர்வர்களில் பொதுப் பிரிவினருக்கு இதுவரை வயது உச்சவரம்பு 32ஆக இருந்தது. இதனை தளர்த்தி தற்போது 37ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37ஆக இருந்த வயது உச்சவரம்பு தளர்த்தப்பட்டு 42 வயது வரை தேர்வர்கள் போட்டித் தேர்வை எதிர்கொள்ளலாம்.
அதேபோல், குரூப் 1 மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப் பிரிவினருக்கு இதுவரை 42ஆக இருந்த வயது உச்சவரம்பு தற்போது தளர்த்தப்பட்டு 47ஆகவும், ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இதுவரை 47ஆக இருந்த வயது உச்சவரம்பு தற்போது 52ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் குரூப் 2 மற்றும் 2ஏ பொதுப் பிரிவினருக்கு இதுவரை 30ஆக இருந்த வயது உச்சவரம்பு 35ஆகவும், ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 மற்றும் 2ஏவில் மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 40ல் இருந்து 45ஆகவும், ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குரூப் 4 பிரிவில் பொதுப் பிரிவினருக்கு வயது உச்சவரம்பு 35ஆகவும், ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37ஆகவும், மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவினருக்கு 45ஆகவும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 47ஆகவும் வயது உச்சவரம்பு நிர்ணயக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அமலுக்குவரும் இந்த வயது உச்சவரம்பு தளர்வு, (BC, BC(M), MBC & DNC, SC, ST, ஆதரவற்ற விதவைகள்) ஏற்கனவே உள்ள வயதுச் சலுகையோடு கூடுதலாக அமையும் என அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வயது தளர்வு அடுத்த ஐந்தாண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




