--- --:--:-- --

வேட்டியை அவுத்து போட்டுட்டு உள்ளே போகட்டுமா?

6

மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்களிக்க வந்த நபர் ஒருவர் அ.தி.மு.க. துண்டு அணிந்து வந்ததால் அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தனர். அப்போது அவர் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 6) காலை 7 மணிக்கு தொடங்கியது.

 

 

அ.தி.மு.க.வில் இருந்து வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் இருவருமே தற்போது த.வெ.க சார்பில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

 

 

அதே சமயம், அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்த இந்த இரு தொகுதிகளிலும் மீண்டும் வெற்றி பெற அ.தி.மு.க. முனைப்பு காட்டி வருகிறது. ஆளும் கட்சியான த.வெ.க தங்கள் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேபோல் த.வெ.க வெற்றியை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஆட்சியில் அவர்களுக்கு ஆதரவு அளித்தாலும், இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இதனிடையே மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் மதுராந்தகம் தொகுதியில் வாக்களிக்க வந்த அ.தி.மு.க.வை சேர்ந்த நபர் ஒருவர் தனது கட்சி துண்டு அணிந்து வாக்களிக்க வந்ததால், காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

பள்ளிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், துண்டுடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று காவலர்கள் சொல்ல, அது ரூல்ஸ் கிடையாது. நான் இதை அவிழ்த்து போட்டுவிட்டு போகட்டுமா என்று வேட்டியை காட்டி கேட்டுள்ளார். அதன்பிறகு துண்டு இல்லாமல் சென்ற அவர், மொபைல் போன் எடுத்துச்சென்ற நிலையில், காவலர்கள் அவரை அழைத்து கேட்டும் மொபைல்போன் தர மறுத்துள்ளார்.

 

 

காவலர்கள் கடுமையாக வற்புறுத்தி கேட்ட பிறகு போனை கொடுத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். மேலும் இந்த வாக்குவாதத்தின்போது, இந்த துண்டு போட எனக்கு உரிமை இருக்கிறது. நான் எம்.ஜி.ஆர் மன்ற கிளை கழக செயலாளர். கட்சிக்காரன் என்றால் இப்படித்தான் இருப்பான் என்று கூறி வாக்குவாதம் செய்தார். கட்சிக்காரன் துண்டு வேட்டி எல்லாம் கட்டாமலா இருப்பான், அவிழ்த்து போட்டு வர சொல்றீங்களா? முதல் ஓட்டு போடுபவனே நான் தான்.

 

 

ஒரு பெரிமனிதன் கட்சியில் இருந்து வந்திருக்கிறேன். எம்.ஜி.ஆர் கட்டிப்பிடித்த ஆள் நான், நீங்கள் என்னை டார்ச்சர் செய்கிறீர்கள் என்று சொல்ல, 7 மணிக்கு தான் வாக்குப்பதிவு என்று சொல்கிறார். அதற்கு அந்த நபர், போடட்டும். அதற்கு முன்பு நான் போய் செக் பண்ண தேவையில்லையா? மிஷின் செக் செய்துவிட்டு, ஓட்டு நன்றாக போகிறார்களா? மிஷின் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு எங்க ஆட்களிடம் சொல்லிவிட்டு நான் வரக்கூடாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon