சோத்துப்பாறை அணை விவகாரம்: அனைத்து மதகுகளுக்கும் பூட்டு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் இருந்து அனுமதியின்றி பாசனத்திற்குத் தண்ணீர் திறந்த விவகாரத்தில், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதகுகளுக்கும் பூட்டு போடவும் உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் புது ஆயக்கட்டு வாய்க்காலில் இருந்து 1000 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்ததாக கடந்த செவ்வாய்க்கிழமை தவெகவினர் வீடியோ, போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். முறையான அரசாணையின்றி பாசனத்திற்காக தண்ணீர் திறந்ததாக தவெகவினர் அறிவித்த இச்சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் இச்செயலுக்கு நீர்வளத்துறையினர் உடந்தையாக இருந்ததாக கூறி நேற்றைய தினம் பெரியகுளம் நகரில் உள்ள மஞ்சளாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை தேனி மாவட்ட பாஜகவினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தவெகவினர் தன்னிச்சையாக திறந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரியகுளம் வட்டார விவசாய சங்கங்களுடன் தேனியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் தேனி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முருக்கோடை இராமர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, எந்தவித ஆணையின்றி தண்ணீர் திறந்தது தவறு தான், அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இவ்விவகாரத்தில் அரசு அறிவுறுத்தல்படி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதகுகளுக்கும், அணையின் நுழைவாயில் கதவுகளுக்கும் பூட்டு போட உத்தரவிட்டிருப்பதாக கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





