--- --:--:-- --

திருப்பூரில் திறந்த ஒரே மாதத்தில் 7 விபத்து, 1 பலி: அணைப்பாளையம் மேம்பாலத்தில் தடுப்பு அமைக்க மக்கள் கோரிக்கை

EEERT

கடந்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்ட திருப்பூர் அணைப்பாளையம் புதிய மேம்பாலத்தில், முறையான போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. பாலம் திறக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாக 7 விபத்துகளும், ஒரு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

சுமார் 20 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு கட்டப்பட்ட இந்த மேம்பாலம், போதிய முன்னேற்பாடுகளோ, போக்குவரத்து ஒழுங்குமுறை கட்டமைப்புகளோ இன்றி அவசரகதியில் திறக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

பாலத்திலிருந்து இறங்கும் வாகனங்கள், பாலத்தின் தூண்களை  ஒட்டியவாறே உடனடியாகத் திரும்பி சர்வீஸ் சாலையைக் கடக்கின்றன. பாலத்திலிருந்து குறைந்தது 10 முதல் 20 மீட்டர் தள்ளித் திரும்புவதற்குப் பதிலாக, மிக நெருக்கமாக வாகனங்களைத் திருப்புவதால் சர்வீஸ் சாலையில் வருபவர்கள் மீது மோதும் அபாயம் ஏற்படுகிறது.

 

தடுப்புகள் மற்றும் ரவுண்டானா இல்லாமை!

 

பாலம் முடியும் பகுதியில் வாகனங்களை ஒழுங்குபடுத்த தடுப்புகளோ  அல்லது சிறிய ரவுண்டானாவோ அமைக்கப்படவில்லை. இதனால் இருபுறமும் வரும் வாகனங்கள் தாறுமாறாகக் குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்றன.


காலேஜ் ரோட்டிலிருந்து வேலம்பாளையம் செல்லும் வழி மற்றும் வேலம்பாளையத்திலிருந்து காலேஜ் ரோடு செல்லும் சர்வீஸ் சாலைகளுக்கான வழிகாட்டிப் பலகைகள் வாகன ஓட்டிகளின் கண்ணில் படும்படி தெளிவாக வைக்கப்படவில்லை. மேலும், இரவு நேரப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த சிக்னல்களோ, ஒளிரும் எச்சரிக்கை விளக்குகளோ  இல்லை.

 

பள்ளி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவதி!

 

பாலத்திற்கு மிக அருகிலேயே பள்ளிக்கூடமும் அமைந்துள்ளது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் இப்பாதையைப் பயன்படுத்துகின்றனர். வேகத்தடைகளோ, போக்குவரத்துக் காவலர்களோ இல்லாததால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் சாலையைக் கடக்க முடியாமல் உயிரைப் பணயம் வைத்துச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

 

கடந்த வாரம் இதே பாலத்தில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தினந்தோறும் 2 முதல் 3 சிறிய மற்றும் பெரிய விபத்துகள் நடப்பதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் அவலநிலை தொடர்வதாகவும் அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.


நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல்!

 

இப்பிரச்சனை குறித்து மாதர் சங்கத்தைச் சேர்ந்த செல்வி கூறியதாவது; இந்த மேம்பாலத்திற்காகக் கடந்த 20 ஆண்டுகளாகப் போராடினோம். ஆனால், எந்தவொரு அடிப்படைக் கட்டமைப்பும் இல்லாமல் அவசரகதியில் இதனைத் திறந்து வைத்துவிட்டார்கள். இப்பகுதி முழுவதும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி; அருகிலேயே பள்ளிக்கூடமும் உள்ளது.

 

ஆனால், இங்கே வேகத்தடையோ, சிக்னலோ, ஒருவழிப் பாதை ஒழுங்குமுறையோ கிடையாது. பாலம் திறக்கும்போதே இங்கே ரவுண்டானா அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் யாரும் செவிசாய்ப்பதாக இல்லை.

 

தினமும் காலையில் வேலைக்குச் செல்பவர்கள் விபத்தில் சிக்கி மருத்துவமனைக்குச் செல்லும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் எச்சரிக்கை விளக்குகள் இல்லை. உடனடியாக அரசு தலையிட்டு ரவுண்டானா அமைக்க வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்துக் காவலர்களை நியமிக்க வேண்டும். தொடர்ந்து அரசு இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், அப்பகுதிப் பெண்களைத் திரட்டி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவோம்.

வேகத்தடை, தடுப்புகள்  வேண்டும்!

பாலம் திறக்கப்பட்டதிலிருந்து தொடர் விபத்துகள் நடக்கின்றன. முதலில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தே விட்டார். இப்போதும் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நிலைதான் உள்ளது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இந்த வழியாகத்தான் சென்றாக வேண்டும். வாகனங்கள் தாறுமாறாகச் செல்வதை தடுக்க, பாலம் முடியும் இடத்தில் நடுவே தடுப்புகள்  அமைத்து இருபுறமும் செல்லும் வாகனங்களைப் பிரித்துவிட வேண்டும்.

 

அதேபோல், வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த இருபுறமும் உடனடியாக வேகத்தடைகள் அமைக்க வேண்டும். அதிகாரிகளிடம் சொன்னால் கேட்பதில்லை. இரவு நேரங்களில் போக்குவரத்தைக் கண்காணிக்க ஆட்களை நியமித்து, தடுப்புகள் அமைத்தால் மட்டுமே இனி விபத்துகளைத் தடுக்க முடியும்.

 

இனியும் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பு, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பாலத்தின் இருபுறமும் தடுப்புகள், வேகத்தடைகள், தெளிவான வழிகாட்டிப் பலகைகள் மற்றும் சிக்னல்களை உடனடியாக அமைக்க வேண்டும் என்பதே திருப்பூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon