--- --:--:-- --

தமிழ்வழி பயின்றோருக்கான 20% அரசுப் பணி முன்னுரிமை..!

4

மிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொண்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் திருத்தத்தின் மூலம் இனி புதிதாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களுக்கு மட்டுமே தமிழ்வழி முன்னுரிமைச் சலுகை செல்லுபடியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

கடந்த 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்களா அல்லது இல்லையா என்ற வேறுபாடின்றி தமிழ் வழியில் படித்த அனைவருக்கும் அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், ஏற்கனவே அரசுப் பணியில் இருக்கும் நபர்கள் மீண்டும் இந்த தமிழ்வழி முன்னுரிமைப் பிரிவின் கீழ் சலுகை பெறுவது தகுதியற்றது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

 

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத் தெளிவுபடுத்தவும், 2010 செப்டம்பர் 7-ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்வழி முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்களின் நியமனங்களை உறுதிப்படுத்தவும், இனி புதிதாகச் சேருபவர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா ஜனவரி மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

 

 

இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, 1-ஆம் வகுப்பு முதல் அரசு வேலைக்கான வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை முழுவதுமாக தமிழ் வழியில் பயின்றவர்கள் மட்டுமே 20% முன்னுரிமை ஒதுக்கீட்டைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். பிற மொழிகளை பயிற்று மொழியாகக் கொண்டு படித்துவிட்டு, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இந்த ஒதுக்கீடு பொருந்தாது. அதேவேளையில், 1-ஆம் வகுப்பில் சேராமல் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8-ஆம் வகுப்புகளில் நேரடியாகச் சேர்ந்து தமிழ் வழியில் படித்தவர்களும், பிற மாநிலங்களில் தமிழ் வழியில் படித்துவிட்டு பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களும் இந்த முன்னுரிமையைப் பெறத் தகுதியுடையவர்கள்.

 

 

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி வரை தமிழ் வழியில் தான் பயின்றார்கள் என்பதை உறுதிப்படுத்த, அவர்கள் படித்த அனைத்துக் கல்வி நிறுவனங்களிலிருந்தும் அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon