சட்டப்பேரவையில் நீட் தேர்வு ரத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்..!
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை முன்மொழிந்தார். நீட் தேர்வு சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார். தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள், கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக நீட் தேர்வு உள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் மாணவர்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் முன்மொழிந்து பேசியதாவது: “இந்தப் பேரவையில் இன்று விவாதிக்கப்படும் பொருள், ஒரு தேர்வுக் குறையைப் பற்றியது மட்டுமல்ல. தமிழ்நாட்டின் சமூகநீதி, மாணவர்களின் எதிர்காலம், கல்வி சமத்துவம், மாநில உரிமை மற்றும் இந்திய கூட்டாட்சித் தத்துவத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான பிரச்சனையாகும்.
மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்முறைக் கல்வி மட்டுமல்ல. அது மனித உயிர்களைக் காப்பாற்றும் பணிக்கான கல்வியாகும். இந்தக் கல்விக்கான வாய்ப்பு பொருளாதார வசதி உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், திறமையும் அர்ப்பணிப்பும் கொண்ட ஒவ்வொரு மாணவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு.
அரசின் பதிலால் ‘வேதனை’: கல்வி உதவித்தொகை வழங்குவதில் தாமதம்; சரிசெய்யக் கோரும் நாடாளுமன்றக் குழு. தமிழ்நாடு பல ஆண்டுகளாக சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய மாநிலமாக திகழ்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை வழங்கப்பட்ட காலத்தில், கிராமப்புற ஏழை மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சிறப்பிடத்தக்க வாய்ப்புகளைப் பெற்றனர்.
அந்தக் கொள்கையின் பலனாகவே இன்று இந்தியாவில் சிறந்த பொது சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகத் திகழ்கிறது. தாய் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டங்கள், அவசர மருத்துவ சேவை, சிக்கலான அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.
இந்த வெற்றிக்கு அடித்தளம் சமூகநீதி, சமவாய்ப்பு, மாணவர்களின் பன்னிரண்டு ஆண்டு பள்ளிக் கல்விக்கு அளிக்கப்பட்ட மதிப்பு உள்ளிட்ட கொள்கைகள்தான். நீட் அறிமுகமான பிறகு இந்த அடிப்படை சமநிலை சீர்குலைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. ஒரு மாணவர் பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளியில் கற்ற கல்வியைவிட, ஒரே நாளில் நடைபெறும் ஒரு தேர்வு அவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடாது. கல்வியின் உண்மையான நோக்கத்திற்கும், பள்ளிக் கல்வியின் மதிப்பிற்கும் இது முக்கியமான கேள்வியாகும்.
நீட் தேர்வு நடைமுறையில் தனியார் பயிற்சி மையங்கள்தான் அதிகம் பயன்பெறுகின்றன. பல குடும்பங்கள் தங்களது குழந்தைகளின் நீட் பயிற்சிக்காக பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பொருளாதார வசதி கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இது கூடுதல் வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், அதே நேரத்தில் அரசுப் பள்ளி மாணவர், தினக்கூலி தொழிலாளியின் குழந்தை அல்லது விவசாயியின் குழந்தை அதே அளவிலான பயிற்சியைப் பெற முடியுமா என்பதுதான் தமிழ்நாட்டின் அடிப்படைக் கேள்வியாக உள்ளது.
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட விரிவான ஆய்வுகளும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் கிடைத்த நேரடி அனுபவமும் தெளிவாகக் காட்டுவது என்னவென்றால், நீட் தேர்வு சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவதற்குப் பதிலாக, அவற்றை மேலும் அதிகரித்துள்ளது. இந்த அரசு எந்த மாணவரின் கனவையும் மறிக்க விரும்பவில்லை. மாறாக, திறமை உள்ள ஒவ்வொரு மாணவரின் கனவும் அவர்களின் பொருளாதாரப் பின்னணி காரணமாக தடைபடக் கூடாது என்பதற்காகவே போராடுகிறது.
நகரங்களில் மட்டும்தான் மருத்துவர்கள் தேவை என்பதில்லை. கிராமங்களிலும், மலைப்பகுதிகளிலும், தொலைதூரப் பகுதிகளிலும் மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற்று, மீண்டும் தங்கள் சமூகத்திற்கே சேவை செய்வதுதான் தமிழ்நாட்டின் சுகாதார அமைப்பின் வலிமையான சங்கிலி. அந்தச் சங்கிலி வலுவிழந்துவிடக் கூடாது என்பதே இந்த அரசின் கவலையாகும்.இந்த நீட் பிரச்சினை கல்வியுடன் மட்டுமல்ல கூட்டாட்சியுடனும் தொடர்புடையது. நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம், மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப அவற்றின் தனித்துவத்தையும், பொறுப்பையும், உரிமையையும் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் வரலாறு, சமூக அமைப்பு, கல்வி முன்னேற்றம் மற்றும் மருத்துவத் தேவைகள் ஆகியவை நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாறுபட்டவை. எனவே, ஒரே மாதிரியான கொள்கை அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூற முடியாது.தமிழ்நாடு ஒன்றிய தரநிலைகளுக்கு எதிரானது அல்ல. தமிழ்நாடு வெளிப்படைத் தன்மைக்கு எதிரானது அல்ல. தமிழ்நாடு திறமைக்கு எதிரானதும் அல்ல.
ஆனால், அதே நேரத்தில், சமூகநீதியைப் பாதிக்கும், சமவாய்ப்பைக் குறைக்கும், மாநிலங்களின் தனித்துவத்தைப் புறக்கணிக்கும் எந்த ஒரு முயற்சியையும், எந்த ஒரு தீர்வையும் ஏற்க முடியாது என்பதே இந்த அரசின் நிலைப்பாடாகும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





