--- --:--:-- --

செம்மஞ்சேரி விளையாட்டு நகரம் திட்டம் ரத்தா?

02

செம்மஞ்சேரியில் உலகத்தரமிக்க விளையாட்டு நகரம் அமைக்கும் பணி ரத்து செய்யப்பட்டதா என்று உதயநிதி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதிலளித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது.

 

 

அப்போது வினா விடைகளுக்கான நேரத்தின் போது பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், செம்மஞ்சேரியில் உலகத்தரமிக்க விளையாட்டு நகரம் அமைக்கும் பணியை மேற்கொண்டோம். பரந்தூர் விமான நிலைய திட்டம் எப்படி ரத்து செய்யப்பட்டதோ, அதே போல இந்தத் திட்டத்தையும் ரத்து செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. செம்மஞ்சேரியில் உலகத்தரமிக்க விளையாட்டு நகரம் அமைக்கும் பணி ரத்து செய்யப்பட்டதா என கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, விளையாட்டுத்துறை மானிய கோரிக்கையில் விளையாட்டு துறைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, முதலமைச்சர் எப்படி கொள்கையை உருவாக்கி வருகிறார் என்பதை விரிவாக பதிவு செய்துள்ளோம். தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்கியதில்லை. 10 ஒலிம்பிக் மையங்கள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளோம்.

 

 

எனவே இந்த விளையாட்டு நகரத்தை ரத்து செய்யவில்லை, மறு கட்டமைப்பு செய்ய உள்ளோம். திமுக ஆட்சியில் ஒப்பந்த புள்ளி கோரியதை தவிர்த்து எந்த பணிகளையும் செய்யவில்லை. அடுத்த 6 மாதங்களில் பணிகளை தொடங்க உள்ளோம். முதலமைச்சர் நல்ல அறிவிப்பை வெளியிடுவார். அறிவிப்பு வெளியிட்டு ஆறு மாதத்திற்குள் பணிகளை தொடங்குவோம். ஐந்து ஆண்டுகளில் பணிகள் முடிந்து விளையாட்டு நகரத்தை முதலமைச்சர் விஜய் கையால் திறந்து வைப்பார் என்றும் தெரிவித்தார்.

 

 

இதை தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு வீரர்கள் உடன் ஆலோசித்து தான் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதை ரத்து செய்யவில்லை எனவும் மறு கட்டமைப்பு பணிகள் செய்யப்படும் என அமைச்சர் கூறி உள்ளார். எனவே விரைவில் இந்த பணிகளை முடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

 

 

மேலும் கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் உலகம் தரம்வாய்ந்த விளையாட்டு உட்கட்டமைப்புகளை உருவாக்கப்படவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த உதயநிதி, பல ஆண்டுகளாக உங்கள் அவை முன்னவர் (செங்கோட்டையன்) தான் விளையாட்டு துறை அமைச்சராக இருந்து உள்ளார். போதுமான விளையாட்டு உட்கட்டமைப்புகளை உருவாக்கவில்லை என கூறும் அமைச்சர் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon