உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் சோனம் வாங்சுக்!
26 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் சோனம் வாங்சுக். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், மருத்துவமனையில் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா, ஜிதேந்திர சிங் முன்னிலையில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாகப் பதிவிட்டுள்ளார். மேலும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை தான் எடுத்ததாகவும் சோனம் வாங்சுக் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், “மருத்துவர்களின் அறிவுரைப்படி சோனம் ஜி கூடிய விரைவில் தனது பழைய உடல் எடையை மீண்டும் பெற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சோனம் ஜி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
இதற்கிடையே, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட சோனம் வாங்சுகிற்கு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே நன்றி தெரிவித்துள்ளார். எனினும், தர்மேந்திர பிரதான் பதவி விலகும்வரை, ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் சிஜேபியின் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறார்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் கடந்த 34 நாட்களாகப் போராடி வருகின்றனர். நேற்று முன்தினம் ஜந்தர் மந்தரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அசாதாரண சூழல் நிலவியது.
அதைத்தொடர்ந்து, ஜந்தர் மந்தரில் நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவியத் தொடங்கினர். ஜந்தர் மந்தரில் இருந்து கன்னாட் பிளேஸ் வரையில் போராட்டக்காரர்கள் திரண்டிருந்தனர். இதனால், துணை ராணுவப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். போராட்டக் களத்தில் இளைஞர்கள் மத்தியில் பேசிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே, நீட் வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை திட்டவட்டமாக நிராகரித்தார். இந்த போராட்டத்தை அங்கீகரிக்க பிரதமருக்கு 34 நாட்கள் ஆகியுள்ளதாகவும் அவர் சாடினார்.
இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், ஜந்தர் மந்தர், சன்சத் மார்க், மத்திய டெல்லியின் பல பகுதிகளில் நேற்று இணைய சேவை துண்டிக்கப்பட்டது. கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் நேற்று மாலை மூடப்பட்டன. பாதுகாப்பு கருதி லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சவுக் படேல் சவுக், ஜன்பாத், மண்டி ஹவுஸ், இந்தியா கேட், சிவாஜி மைதானம் உள்ளிட்ட 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




