--- --:--:-- --

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் – புதிய மசோதா கொண்டு வர முடிவு

01

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா தளத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி நேற்று நள்ளிரவில் காணொளி ஒன்றை பகிர்ந்திருக்கிறார். இதுதொடர்பாக நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தனது எக்ஸ் தளத்தில் அவர், “நாளை கூடும் அமைச்சரவை கூட்டத்தில் வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது பற்றி விவாதிக்கப்படும்!” என்ற கேப்ஷனிட்டுள்ளார்.

 

 

தனது காணொளியில் பிரதமர் மோடி, “நண்பர்களே, வினாத்தாள் கசிவு ஒரு சாதாரணப் பிரச்சனை அல்ல என எனக்குப் புரிகிறது. இந்தவொரு விஷயம், லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் பெரும் வேதனையை கொடுத்துள்ளது. இதை உணர்ந்ததால்தான், இவ்விவகாரத்தில் கடந்த இரண்டரை மாதங்களாக பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

இந்த வினாத்தாள் கசிவு சர்ச்சையின் காரணமாக எந்தவொரு மாணவரும், தனது ஒரு வருடத்தை இழந்துவிடக்கூடாது என்றே நாங்கள் நினைத்தோம். அதை உறுதி செய்வதே அரசின் முன்னுரிமையாக இருந்தது. அதனால்தான் நம் அரசு தனது அதிகபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி, மிகவும் குறுகிய காலத்தில் சுமார் 22 லட்சம் மாணவர்களுக்கான மறுதேர்வை நடத்தி முடித்தது. சில தினங்களுக்கு முன் தேர்வு முடிவுகளும் வெளிவந்துள்ளன.

 

 

இதனால் நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் மகிழ்ச்சியடைந்து திருப்தி பெருமூச்சு விட்டாலும்கூட, எங்களுக்கு (அரசு) இன்னும் திருப்தி ஏற்படவில்லை. அதனால்தான் அதிகாரிகளிடம் நான் ‘இவ்விவகாரத்தில் நீதிமன்ற நடைமுறைகளை தொடர்ந்து கவனியுங்கள், விரைவு நீதிமன்றங்களை அமைப்பதன் மூலம் விசாரணைகளை விரைவுபடுத்துங்கள். கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தேவையான முயற்சிகளை எடுங்கள்’ எனக்கூறினேன்.

 

 

அதிகாரிகளும் அயராது உழைத்து, ‘வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா’ தொடர்பான ஒரு வரைவுத் திட்டத்தை என்னிடம் சமர்ப்பித்துள்ளனர். விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான விதிகளை உள்ளடக்கிய இந்த வரைவு, நாளை அமைச்சரவையில் விவாதிக்கப்படும். அமைச்சர்களின் ஆலோசனைகளுக்குப் பின் நாளையே இறுதி செய்யப்படும். வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரம் தொடங்கிய பின்னர், கூடிய விரைவில் இந்த மசோதாவை அவையில் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

இன்றைய தினம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பிரதிநிதிகள் குழு மத்திய அமைச்சர்களைச் சந்திக்கும் என்ற செய்திகள் வெளியான சிறிது நேரத்திலேயே பிரதமர் மோடி இந்த காணொளியை பகிர்ந்திருக்கிறார். தகவல்களின்படி, இந்தச் சந்திப்பு இன்று மதியம் 12 மணிக்கு மேல் நடைபெற உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் சந்திப்பு நடைபெறும் இடம் தெரிவிக்கப்படவில்லை. “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். கல்வி முறையில் முழுமையான சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கரப்பான்பூச்சி கட்சியினர் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon