கார் டயர் வெடித்து விபத்து – 4 கல்லூரி மாணவர்கள் பலி..!
மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே காரின் பின்புற டயர் வெடித்து நிகழ்ந்த பயங்கர விபத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலத்த காயமடைந்தனர். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் பாண்டிச்சேரிக்கு சென்றுவிட்டு மீண்டும் கார் மூலம் சென்னை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கார் மதுராந்தகம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காரின் பின்புற டயர் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த மாணவர்கள் 7 பேரும் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தின் காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் போலீசார் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, படுகாயமடைந்த 7 பேரில் ராமு, ராஜி, தீபக், ஹரிஷ் ஆகிய நான்கு இளைஞர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




