ரயில் நிலையத்தில் இனி குப்பைகளை வீசினால் அபராதம்..!
ரயில்கள் மற்றும் ரயில் நிலையத்தில் குப்பை போட்டால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்கள், ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தாலும், பயணிகள் அதனை பொருட்படுத்துவதே இல்லை.
ரயில்களிலேயே குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தாலும்கூட, தின்பண்டங்களின் கவர்கள், தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்திவிட்டு அப்படியே இருக்கைகளுக்கு அடியில் போடுவது, ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிவது போன்ற செயல்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
2012 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ரயில்கள், ரயில் நிலையங்களில் குப்பை போட்டால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ரயில்கள், ரயில் நிலையங்களில் குப்பைகள் போட்டால் அதற்கான அபராதம் 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஆகஸ்டு 24 ஆம் தேதியிட்ட அரசிதழில் செய்தி வெளியிட்டுள்ளது.
ரயில்வே வளாகத்தில் சமைத்தல், குளித்தல், எச்சில் துப்புதல் மற்றும் சிறுநீர் கழித்தல் போன்ற பிற நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கடுமையாக விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறுபவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, அவர்களுக்கு 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




