இன்று நீலகிரி, கொடைக்கானலில் உறைபனிக்கு வாய்ப்பு..!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரியமாற்றம் ஏதுமில்லை என குறிப்பிட்டுள்ள வானிலை மையம், சற்று குறையக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) இன்று ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ள வானிலை மையம், அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




